Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

சிட்னியில் இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸி.க்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்நிலையில் 2-வது ஆட்டம் இன்று காலை அதே மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தது. பேட்டிங்கில் கேப்டன் ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதம் விளாசினர். டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

பந்து வீச்சில் ஜோஸ் ஹேசல்வுட் பவுன்ஸர்களாலும், ஆடம் ஸம்பா சுழலாலும் 375 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியஅணியை சோதனைகளுக்கு உட்படுத்தினர் பேட்டிங்குக்கு சாதகமாக அமைந்துள்ள சிட்னி மைதானத்தில் மீண்டும் ஒரு முறை ஆதிக்கம் செலுத்தி தொடரை கைப்பற்றுவதில் ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டக் கூடும். முதல் ஆட்டத்தின் போது காயம் அடைந்த ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாயினிஸ் இன்று களமிறங்குவது சந்தேகம்தான். அவருக்கு பதிலாக மற்றொரு ஆல் ரவுண்டரான மேகரூன் கிரீன் களமிறக்கப்படக் கூடும்.

இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் நெருக்கடியுடன் களமிறங்குகிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சும் மோசமாக அமைந்தது. மேலும் 6-வது பந்து வீச்சாளர் இல்லாததும் பெரிய பின்னடைவை கொடுத்தது. இதனால் பந்து வீச்சில் இன்று மாற்றங்கள் இருக்கக் கூடும். யுவேந்திர சாஹல், நவ்தீப் சைனி ஆகியோர் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் சேர்க்கப்படக் கூடும்.

கடந்த ஆட்டத்தில் சாஹல், ஷைனி ஆகியோர் கூட்டாக 20 ஓவர்களை வீசி 172 ரன்களை தாரைவார்த்திருந்தனர். முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் ஷைனி ஒரு நாள் போட்டித் தொடரில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் விளையாடும் லெவனில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

பந்து வீசுவதற்கான முழு உடற்தகுதியுடன் இல்லாததால் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் மட்டும் பங்களிப்பு செய்து வருகிறார். முதல் ஆட்டத்தில் அவர் 76 பந்துகளில் 90 ரன்கள் விளாசியது 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியை நினைவூட்டுவதாக இருந்தது. இந்த இரு ஆட்டத்திலும் அவரது பேட்டிங் சிறப்பாக அமைந்த போதிலும் அது எந்த வகையிலும் வெற்றிக்கு உதவாமல் போனது. ஆல்ரவுண்டர் விஷயத்தில் தற்போதைக்கு இந்திய அணியிடம் மாற்று திட்டங்கள் ஏதுவும் இல்லை.

இதனால் டாப் ஆர்டர் பேட்டிங் நிலைமையை உணர்ந்து பொறுப்புடன் விளையாடினால் மட்டுமே அணியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x