Last Updated : 26 Nov, 2020 05:48 PM

 

Published : 26 Nov 2020 05:48 PM
Last Updated : 26 Nov 2020 05:48 PM

3 பெரிய கிரிக்கெட் வாரியங்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை: புதிய ஐசிசி தலைவர் கருத்து

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராகப் பதவியேற்றிருக்கும் க்ரேக் பார்க்லே, தனக்கு 3 பெரிய கிரிக்கெட் வாரியங்கள் என்ற அமைப்பில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் பல நாடுகள் கிரிக்கெட் விளையாடினாலும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று கிரிக்கெட் வாரியங்களுக்குத்தான் செல்வாக்கு அதிகம். எனவே இந்த மூன்று வாரியங்களுக்கு ஏற்றவாறே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செயல்படுவதாகக் கடந்த காலத்தில் பேச்சுகளும் எழுந்துள்ளன.

தற்போது ஐசிசியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் க்ரேக் பார்க்லே பேசுகையில், "என்னைப் பொறுத்தவரை மூன்று பெரிய வாரியங்கள் என்பதெல்லாம் கிடையாது. எல்லாருமே முக்கியமானவர்கள். சமமாக நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு தேசத்தாலும் ஒவ்வொரு வகையில் இந்த ஆட்டத்துக்குப் பங்காற்ற முடியும். ஆனால், எல்லோரும் இணைந்துதான் பணியாற்ற வேண்டும். அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். பெரிய தொடர்களை நடத்துவது, நிறைய வருவாய் உருவாக்குவது போன்ற சில விஷயங்களைச் சில பெரிய தேசங்களால் தர முடியும். ஆனால் அதற்காகத் தனியாக பெரிய 3 வாரியங்கள் என்றெல்லாம் நினைக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இன்னும் ஒரு கிரிக்கெட் அணி பங்கேற்கும் சூப்பர் சீரிஸ் என்கிற தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இது நடந்தால் பங்குபெறும் அனைத்து நாடுகளுக்கும் வருவாய் ரீதியில் அதிக பயனைத் தரும். ஐசிசி, சர்வதேசத் தொடர்களின் மூலம் அதிக வருமானம் பெறுகிறது. எனவே இந்த சூப்பர் சீரிஸுக்கு ஐசிசி அனுமதி அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது பார்க்லேவின் இந்தக் கருத்துக்குப் பிறகு இந்தத் தொடர் நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

பார்க்லே அக்லாந்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். ஏற்கெனவே நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநராக இருந்துள்ளார். மேலும், 2015ஆம் அண்டு நடந்த உலகக்கோப்பை குழுவின் இயக்குநராகவும் இருந்துள்ளார். தற்போது, ஐசிசியில் நியூஸிலாந்தின் பிரதிநிதியாக இருந்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x