

தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க, காஞ்சிபுரம் அரசு பள்ளி மாணவிகள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம், 14-வது தேசிய அளவிலான மகளிர் ஹாக்கி போட்டியை நடத்த உள்ளது. இதில், தகுதி பெறுவதற்கான மாநில அளவிலான போட்டிகள், பள்ளி கல்வித்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த தகுதிப் போட்டியில், காஞ்சிபுரம் அரசு பள்ளியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் கே.நாகம்மா மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் கே.காயத்ரி ஆகியோர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் அவர்கள் பங்கேற்பர். இந்த மாணவிகளுக்கு, பயிற்சியாளர் ரமேஷ் மற்றும் விளையாட்டு அலுவலர் தங்கநாயகி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.