

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 1-0 என்ற கோல்கணக்கில் கேரளாவை வென்றது. இதன்மூலம் டெல்லி அணி புள்ளிபட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.
டெல்லி - கேரளா அணிகளிடையேயான கால்பந்து போட்டி கொச்சி நகரில் நேற்று நடந்தது. இதில் தங்கள் சொந்த மண்ணில் விளையாடிய கொச்சி அணி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே டெல்லி அணியின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சித்தது. ஆனால் டெல்லி அணியும் விட்டுக்கொடுக்காமல் போராடியது. 2 அணிகளும் எதிரணிகளின் கோல் அடிக்கும் முயற்சிகளை முறியடிக்க முதல் பாதி ஆட்டம் 0 - 0 என்று சமநிலையில் முடிந்தது.
ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் சக வீரர் மலவுடா பாஸ் செய்த பந்தை கோலுக்குள் திணித்து டெல்லி அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் ரிச்சார்ட் கட்ஸே. கடைசி நேரத்தில் தங்களுக்கு எதிராக கோல் விழுந்ததால் கேரள அணி திணறியது.
ஆட்டத்தை சமன்செய்யும் முயற்சியில் கேரள வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் கடைசி வரை அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து டெல்லி அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 9 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கேரள அணி 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.