

கடந்த முறை இந்திய அணியிடம் தொடரை இழந்த போது அணியில் இழந்த வீரர்கள் பலருக்கு, அந்தத் தோல்வியே இம்முறை வெற்றி பெற ஊக்கம் தருவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.
2018-19ஆம் ஆண்டு 2-1 என்கிற கணக்கில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது. சொந்த மண்ணில் ஒரு ஆசிய அணியிடம் ஆஸ்திரேலிய அணி தொடரை இழப்பது அதுவே முதல் முறை. முக்கியமாக இந்தத் தொடரின் போதுதான் பாலை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஸ்டீவ் ஸ்மித்தும், வார்னரும் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். இருவரும் கிரிக்கெட் விளையாட ஒரு வருடம் ஆடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தொடரின் தோல்வியே அணி வீரர்களுக்கு ஊக்கம் தருவதாக டிம் பெய்ன் தற்போது பேசியுள்ளார்.
"அந்தத் தோல்வியின் போது அணியில் இருந்த வீரர்கள் பலரை அந்த உணர்வு தான் செலுத்துகிறது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் மீண்டும் தங்கள் ஆட்டத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர், தங்கள் திறமையைக் காட்ட விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
எல்லோருமே உற்சாகத்துடன் இருக்கிறோம். கடந்த முறை நாங்கள் தேவையான ரன்களை சேர்க்கவில்லை. இம்முறை எங்கள் சில வீரர்கள் அது பற்றிப் பேசியுள்ளனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களைக் கடந்த முறையை விட அதிகமான ஓவர்களை வீசவைத்தால் போதும். ஏதோ ஒரு வழியில் அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்பதை எங்கள் பந்துவீச்சு ஏற்கனவே காட்டியிருக்கிறது
கடந்த முறை இருந்ததை விட எங்கள் அணி தற்போது மேம்பட்டு இருக்கிறது. ஸ்மித், வார்னர் போன்றோர் இல்லையென்றாலும் ஒரு தொடரை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் அந்தத் தோல்வி இன்னும் என்னை வாட்டுகிறது" என்று பெய்ன் கூறியுள்ளார்.