

மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெறும் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் மீண்டும் ஒரு அதிரடி சதம் அடித்து வாரியத் தலைவர் எண்ணிக்கையான 296 ரன்களைக் கடக்க உதவினார்.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 302 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த ஆட்டம் எப்படியிருந்தாலும் டிராதான்.
வாரியத் தலைவர் அணியின் ஷர்துல் தாக்கூர் காலையில் அருமையாக வீசினார். நேற்றே வான் ஸில், இரவுக்காவலன் ஹார்மர் என்று 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர்.
இன்று டு பிளெஸ்ஸிஸ் (4), கேப்டன் ஆம்லா (1) ஆகியோரையும் சடுதியில் பெவிலியன் அனுப்பினார். டுபிளெஸ்ஸிஸ் எல்.பி. ஆக, ஆம்லா 1 ரன்னில் நாயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டீன் எல்கர் 23 ரன்களில் என்.பி.சிங் பந்தில் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா 57/5 என்று சரிவு நிலை கண்டது.
ஆனால் டிவில்லியர்ஸ் வேறு திட்டங்கள் வைத்திருந்தார். முதலில் தெம்பா பவுமா (15) உடன் இணைந்து ஒரு அரைசதக் கூட்டணி அமைத்தார். பிறகு விக்கெட் கீப்பர் டேன் விலாஸ் (54) உடன் இணைந்து சதக்கூட்டணி அமைத்தார்.
131 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்த டிவில்லியர்ஸ், ஆஃப் ஸ்பின்னர் ஜயந்த் யாதவ்விடம் தேநீர் இடைவேளையின் போது ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா 259/8 என்று இருந்தது.
ஆனால் அதன் பிறகு பிலாண்டர் 12 ரன்களையும் டேல் ஸ்டெய்ன் 28 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 37 அதிரடி ரன்களையும் எடுக்க, 6 வைடுகள், 7 நோபால்களுடன் உதிரிகள் வகையில் கூடுதலாக 21 ரன்கள் கிடைக்க தென் ஆப்பிரிக்கா கடைசியில் 302 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வாரியத் தலைவர் அணியில் ஷர்துல் தாக்கூர் 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்ப்ற்றினர்.
2-வது இன்னிங்ஸை வாரியத் தலைவர் அணி தொடங்கிய போது ராகுல், செடேஸ்வர் புஜாரா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஸ்டெய்ன், மோர்கெல், ரபாதா பவுலிங் போடாத நிலையில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் சேர்த்துள்ளனர்.