Last Updated : 25 Nov, 2020 03:14 AM

 

Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: பவுன்சரால் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்

மக்களை மகிழ்விக்கும் விஷயங்களில் ஒன்று விளையாட்டுப் போட்டி. ஆனால் அப்படிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின்போது சோகமான சில சம்பவங்களும் நடைபெறுவது உண்டு. அப்படிப்பட்ட சோக சம்பவங்களில் ஒன்றுதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூஸின் மறைவு.

ஆஸ்திரேலிய அணியில் தனது 20-வது வயதில் நுழைந்த பிலிப் ஹியூஸ், அந்த அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் 1,535 ரன்களையும், 25 ஒருநாள் போட்டிகளில் 826 ரன்களையும் குவித்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக அவர் ஆடினார். 2014-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக பேட்டிங் செய்துகொண்டு இருந்தார் பிலிப் ஹியூஸ். தொடக்க ஆட்டக்காரராக அவர் அரை சதத்தை கடக்க, அவரை அவுட் ஆக்கும் முயற்சியில் பவுன்சர் பந்து ஒன்றை வீசியுள்ளார் நியூ சவுத் வேல்ஸ் அனியின் வேகப்பந்து வீச்சாளரான சீன் அபாட். எதிர்பாராத வகையில் அந்த பந்து ஹியூஸின் கழுத்தைத் தாக்கியது. அடுத்த கணமே அவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். கோமா நிலைக்கு சென்ற அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2 நாட்களுக்கு பிறகு (நவம்பர் 27) நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார் பிலிப் ஹியூஸ். அவரது மரணம் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையே சோகத்தில் ஆழ்த்தியது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அந்நாட்டின் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹியூஸ் அணிந்த 64-ம் எண் கொண்ட ஜெர்ஸிக்கும் ஆஸ்திரேலிய அணி ஓய்வு அளித்தது. ஹியூஸை கவுரவிக்கும் வகையில் அந்த எண் கொண்ட உடையை ஆஸ்திரேலியாவில் இனி எந்த வீரரும் அணிய மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x