Last Updated : 24 Nov, 2020 03:13 AM

 

Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM

விளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவில் ஹாக்கி தொடங்கிய கதை

கிரிக்கெட்டுக்கு முன்னதாக சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு கவுரவத்தை தேடித்தந்த விளையாட்டு என்று ஹாக்கியைச் சொல்லலாம். ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை வாங்கித் தந்த பெருமை ஹாக்கி விளையாட்டுக்கு உண்டு.

உலக அளவில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஹாக்கி விளையாட்டு தோன்றியதாகவும், இவ்விளையாட்டு முதலில் எகிப்தியர்களால் ஆடப்பட்டதாகவும் கூறப்பட்டாலும், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின்போது ஹாக்கி அறிமுகமானது. ஆரம்பத்தில் இங்கு தங்கியிருந்த இங்கிலாந்து ராணுவ வீரர்கள் பொழுதுபோக்குக்காக ஹாக்கி விளையாட்டை ஆடியுள்ளனர். இதைப் பார்த்த இந்திய இளைஞர்களுக்கும் ஹாக்கி விளையாட ஆசை வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களும் ராணுவ வீரர்களிடம் ஹாக்கி விளையாட்டை கற்றுள்ளனர்.

இந்தியாவின் முதலாவது தொழில்ரீதியிலான ஹாக்கி கிளப் 1885-86-ல் கொல்கத்தாவில் உருவானது. பின்னர் மும்பை, பஞ்சாப் ஆகிய ஊர்களிலும் ஹாக்கி கிளப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து முதலில் வங்கத்திலும், பின்னர் மும்பை, ஒரிஸா, பிஹார், டெல்லி ஆகிய பகுதிகளிலும் ஹாக்கி கூட்டமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்குள்ள அணிகள் ஒன்றுடன் ஒன்று விளையாடி, தங்கள் ஹாக்கி திறனை மேம்படுத்தியுள்ளன.

இந்தியாவில் உள்ள அனைத்து ஹாக்கி கூட்டமைப்புகளும் 1925-ம்ஆண்டு நவம்பர் மாதத்தில் குவாலியர் நகரில் கூடி, இந்திய ஹாக்கி கூட்டமைப்பை தொடங்கியுள்ளன. இந்தியாவுக்கென்று பொதுவாக ஒரு ஹாக்கி அணியை இந்த கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தி யாவின் அதிகாரப்பூர்வ அணி முதல்முறையாக நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தின்போது, நியூஸிலாந்துக்கு எதிராக 21 போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி 18 போட்டிகளில் வெற்றி பெற்றது. 2 போட்டிகள் டிராவில் முடிய 1 போட்டியில் மட்டுமே இந்திய அணி தோற்றது. இத்தொடரில் இந்திய வீரர்கள் அடித்த கோல்களின் எண்ணிக்கை 192.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x