'ஐபிஎல் தொடரில் என்னுடைய ஹீரோ தமிழக வீரர் நடராஜன்தான்': கபில் தேவ் புகழாரம்

தமிழக வீரர் நடராஜனை பாராட்டும் சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் : கோப்புப்படம்
தமிழக வீரர் நடராஜனை பாராட்டும் சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் : கோப்புப்படம்
Updated on
2 min read


13-வது ஐபிஎல் சீசனில் என்னுடைய ஹீரோ தமிழக வீரர் டி நடராஜன்தான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஜாம்பவான் கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

13-வது ஐபிஎல் சீசனில் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தனது யார்கர் பந்துவீச்சால் ஈர்த்தவர் தமிழக வீரர் நடராஜன் என்றால் மிகையல்ல. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற நடராஜன், 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நடராஜன் மீது மலைபோல் நம்பிக்கை வைத்து டேவிட் வார்னர் தொடர்ந்து வாய்ப்பளிக்க அதை சிறிதும் பிசகாமல் காப்பாற்றினார். இதனால் சில போட்டிகளுக்குப்பின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளராக சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் மாறினார்.

அனுபவமான பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய நிலையில், வேகப்பந்துவீசச்சுக்கு சன்ரைசர்ஸ் அணியில் வலு சேர்த்தவர் நடராஜன்.

அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிராக 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸை யார்கர் மூலம் நடராஜன் ஆட்டமிழக்கச் செய்தவிதம் ரசிகர்களால் மறக்க முடியாத விக்கெட்டை இருந்து வருகிறது. ஐபிஎல் சீசனிலேயே மிகச்சிறந்த டெலிவரியாக நடராஜனுக்கு இது அமைந்துள்ளது.

டிஎன்பிஎல் லீக்கில் விளையாடிய நடராஜனின் திறமையைப் பார்த்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடராஜனுக்கு ஒரு போட்டியில்கூட வாய்ப்பு வழங்கவில்லை.

ஆனால், இந்த முறை சன்ரைசர்ஸ் அணி, நடராஜனின் திறமையை அடையாளம் கண்டு அவரை பட்டை தீட்டியுள்ளது. நடராஜனின் அபாரமான பந்துவீச்சு திறமையால், முதல்முறையாக ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

நடராஜனின் பந்துவீச்சு அனைத்து முன்னணி வீர்ரகளாலும் பாராட்டப்பட்டு வருகிறது என்றாலும், ஜாம்பவான், முன்னாள் கேப்டன் கபில் தேவ் பாராட்டியதுதான் மணிமகுடமாக அமைந்துள்ளது.
இந்துஸ்தான் டைஸ்ம் நாளேட்டின் மாநாட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பங்கேற்றார்.

அப்போது நடராஜன் குறித்து கபில் தேவ் பேசுகையில் “ இந்த ஐபிஎல் சீசனில் என்னுடைய ஹீரோ நடராஜன்தான். இளம் வீரரான நடராஜன் எந்தவிதமான அச்சமில்லாமல், பல யார்கர்களை வீசியதைப் பார்க்க பெருமையாக இருந்தது. வேகப்பந்துவீச்சில் யார்கர் தான் சிறந்த பந்து.இன்று மட்டுமல்ல 100 ஆண்டுகால வேகப்பந்துவீச்சில் யார்கர் தான் சிறந்த பந்துவீச்சு. இதை நடராஜன் கச்சிதமாகச் செய்து வருகிறார்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தீவிரமாகப் பயிற்சி எடுத்துவரும் நடராஜன் குறித்து பிசிசிஐ வீடியோ வெளியிட்டுள்ளது.

அதில் “ ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக பந்துவீசிய நடராஜனை பார்த்திருக்கிறோம். இங்கேயும் நடரஜான் இந்திய அணிக்காக பந்துவீசி வருகிறார். இந்திய அணிக்காக முதல்முறையாக தேர்வுசெய்யப்பட்ட நடராஜன் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கனவு நனவாகியதருணம்” எனத் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in