Last Updated : 21 Nov, 2020 03:32 PM

 

Published : 21 Nov 2020 03:32 PM
Last Updated : 21 Nov 2020 03:32 PM

மீண்டும் களத்தில் 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' இயக்கத்துக்கு ஆதரவா? மார்க் பவுச்சர் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்துக்குக் களத்தில் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்கிற கருப்பினத்தவர் காவல்துறை அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்ட பிறகு கருப்பினத்தவர் மீதான பாரபட்சம், தாக்குதலை எதிர்த்து கருப்பினத்தவர் உயிரும் முக்கியம் (black lives matter) என்கிற இயக்கம் சர்வதேச அளவில் பிரபலமானது. இந்த இயக்கத்துக்கு நட்சத்திரங்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர் வீராங்கனைகள் எனப் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் நெல்சன் மண்டேலா சர்வதேச நாளை ஒட்டி நடந்த 3டிசி கிரிக்கெட் தொடரில், இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம், தென்னாப்பிரிக்க வீரர்கள், களத்தில் ஒரு காலால் மண்டியிட்டு தங்கள் எண்ணங்களைக் காட்டினர். இதே போல மேற்கிந்தியத் தீவுகள் - இங்கிலாந்து அணிகள் ஆடிய டெஸ்ட் போட்டியிலும் அந்தந்த அணி வீரர்கள் களத்தில் மண்டியிட்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.

அடுத்து நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து தொடரில் இது தொடருமா என்று தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சரிடம் கேட்டபோது, "இந்த இயக்கத்தை அணிக்குள் முன்னெடுத்து நடத்தும் நிகிடியிடம் பேசினேன். எங்களால் செய்ய முடிந்த விஷயத்தை நாங்கள் செய்துவிட்டோம் என்பதில் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். குறிப்பாக நடந்து முடிந்த அந்த 3டிசி போட்டியில்.

தொடர்ந்து அதைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். இதை ஆரம்பித்தவர்களே செய்தவரை போதும் என்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஒருவேளை அவர்களுக்கு இன்னும் ஆதரவு காட்ட வேண்டும் என்று தோன்றினால் அவர்கள் வெளிப்படையாகப் பேசலாம்" என்று கூறியுள்ளார்.

தென்னப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமஃபோஸா நவம்பர் 25 முதல் 29 வரை, கோவிட்-19 தொற்றில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினங்களாகவும், பாலின ரீதியான வன்முறைக்கு எதிரான தினங்களாகவும் அறிவித்துள்ளார். எனவே ஜனாதிபதியின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு ஆட்டத்தின் போது வீரர்கள் கையில் கருப்புப் பட்டையை அணிவார்கள் என பவுச்சர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x