விளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவின் முதல் ஓட்ட வீராங்கனை

நீலிமா கோஷ்
நீலிமா கோஷ்
Updated on
1 min read

சர்வதேச தடகள போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை வென்று கொடுத்தவர்கள் பெண்கள்தான். பி.டி உஷா, ஷைனி வில்சன், வல்சம்மா, அஞ்சு ஜார்ஜ், டுட்டி சந்த் என்று இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அந்த வகையில் இந்திய வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் நீலிமா கோஷ்.

1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக்போட்டியில் 17 வயது பெண்ணாக நீலிமா கோஷ் பங்கேற்றார். அந்தக் காலத்தில் பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு இந்திய சமூகம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது. பெண்கள் வெளியில் வருவதே பாவம் என்ற சூழல் இருந்தது. இந்தச் சூழலில் சமூகத்தின் எதிர்ப்பை புறம்தள்ளி கடும் பயிற்சியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு நீலிமா கோஷ் தகுதி பெற்றார். இந்த ஒலிம்பிக் போட்டியில் நீலிமா கோஷுடன் மேரி டிசோசா என்ற மற்றொரு வீராங்கனையும் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். இருப்பினும் நீலிமா கோஷ் பங்கேற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் முதலில் நடந்ததால், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பங்கேற்ற முதல் தடகள வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 13.8 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த நீலிமா கோஷ், இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார். அடுத்து நடந்த 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில், முதலிடம் பெற்ற வீராங்கனையை விட 2 விநாடிகள் பின்தங்கினார். இந்த ஒலிம்பிக் போட்டியில் நீலிமா கோஷ் பதக்கங்களை வெல்லா விட்டாலும், இந்தியப் பெண்களாலும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in