Last Updated : 20 Nov, 2020 12:42 PM

 

Published : 20 Nov 2020 12:42 PM
Last Updated : 20 Nov 2020 12:42 PM

விராட் கோலி இல்லையென்றால் அணியிடம் தெளிவு இருக்காது: ரிக்கி பாண்டிங் கருத்து

ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு விராட் கோலி இல்லை எனும்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் தெளிவிருக்காது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதில் 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்குக் குழந்தை பிறக்கவிருப்பதால், முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு கோலி நாடு திரும்ப பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகள் நடப்பதற்கு முன் ஆஸ்திரேலியத் தரப்பிலிருந்து ஏதாவது ஒரு வீரர் இந்திய அணியைச் சீண்டும் வகையில் பேசுவது வாடிக்கையே. களத்தைத் தாண்டி மனரீதியாக எதிரணியைப் பலவீனமாக்கும் யுக்தியாக இதைப் பல காலமாகவே ஆஸ்திரேலியா கையாண்டு வருகிறது.

தற்போது, விராட் கோலியின் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு நாடு திரும்புவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

"மூன்று டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இருக்கப் போவதில்லை என்பதால் அந்த வெற்றிடத்தை, அவரது தலைமை மற்றும் பேட்டிங் திறன் இல்லாததை இந்தியா உணரும். அது ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறு விதமான அழுத்தத்தைத் தரும். அஜிங்க்யா ரஹானேவுக்கு தலைவர் பதவி கொடுக்கப்படலாம். அப்படி நடந்தால் அவருக்கும் கூடுதல் அழுத்தம் இருக்கும். முக்கியமான 4ஆம் நிலையில் ஆட ஒரு வீரரை அவர்கள் தேட வேண்டியிருக்கும்.

அப்போது இந்திய அணி தெளிவாக யோசிக்காது என்றே நினைக்கிறேன். இப்போது கூட முதல் டெஸ்ட் போட்டிக்கான அவர்களது பேட்டிங் வரிசை என்ன, யார் தொடங்குவார்கள், கோலி சென்றபின் யார் 4ஆம் நிலையில் ஆடுவார்கள் என்பது குறித்த தெளிவு அவர்களிடம் இருக்காது என்றே நினைக்கிறேன்.

பந்துவீச்சுக்கு பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், சைனி எனப் பலர் இருக்கின்றனர். இஷாந்த் சர்மா காயத்திலிருந்து மீண்டுவிட்டால் அவரும் அணியில் இருப்பார். ஆஸ்திரேலிய அணியில் புகோவ்ஸ்கி, க்ரீன் ஆகிய வீரர்கள் விளையாடுவார்களா என்று கேட்பதுபோல இந்திய அணியிலும் யார் பந்துவீச்சுக்கு வருவார்கள் என்று அதை விட அதிகமான கேள்விகள் எழும். மேலும் சுழற்பந்து வீச்சுக்கு யார் என்றும் அவர்கள் யோசிக்க வேண்டும். முதல் போட்டி பகலிரவாக நடைபெறுகிறது, பிங்க் நிறப் பந்தை வீச யார் என்று பார்க்க வேண்டும்" என்று ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

2018-19ஆம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. ஆனால் அப்போது டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் என இரண்டு நட்சத்திர வீரர்களும் அணியில் இல்லை. இதையே ரிக்கி பாண்டிங்கும் சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடியிருந்தாலும் இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாத அணியைத்தான் அவர்கள் வென்றிருக்கின்றனர் என்கிற ரீதியில் பாண்டிங் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x