Published : 20 Nov 2020 07:18 AM
Last Updated : 20 Nov 2020 07:18 AM

விளையாட்டாய் சில கதைகள்: முதல் போட்டியில் சதம் அடித்த விஸ்வநாத்

இந்திய கிரிக்கெட்டை கவாஸ்கர் ஆக்கிரமித்திருந்த காலத்தில், சில போட்டிகளில் அவரையும் கடந்து ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தவர் குண்டப்பா விஸ்வநாத். ரசிகர்களை மட்டுமின்றி கவாஸ்கரையும் இவரது பேட்டிங் ஸ்டைல் கவர்ந்திருந்தது. அதனால்தான் கவாஸ்கர் தன் மகனுக்கு விஸ்வநாத்தின் பெயரையும் சேர்த்து ரோஹன் ஜெய்விஷ்வா என்று பெயரிட்டார். இப்படி கவாஸ்கரையே கவர்ந்த விஸ்வநாத், தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த நாள் இன்று (20-11-1969).

பேட்டிங்கில் பெரியவராக இருந்தாலும், உயரத்தில் குள்ளமானவர் விஸ்வநாத். பிற்காலத்தில் கர்நாடக ஜூனியர் அணிக்கான தேர்வு நடைபெற்றபோது, விஸ்வநாத்தின் உயரத்தைப் பார்த்த தேர்வாளர்கள், அவரால் பவுன்சர் பந்துகளை சமாளிக்க முடியுமா என்று சந்தேகப்பட்டனர். ஆனால் பிற்காலத்தில் கர்நாடக ஜூனியர் அணிக்காகவும், ரஞ்சி போட்டிகளில் கர்நாடக அணிக்காகவும் அவர் அதிக சதங்களை விளாசினார். அனைத்து வகை பந்துகளையும் அடித்து நொறுக்கினார்.

ரஞ்சி போட்டிகளில் சாதித்ததால், இந்திய அணியிலும் இடம்பிடித்தார். 1969-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கான்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் களம் இறங்கினார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். கவலையோடு பெவிலியன் திரும்பிய அவரை அழைத்த அப்போதைய இந்திய கேப்டன் பட்டோடி, “கவலைப்படாதீர்கள். அடுத்த இன்னிங்ஸில் நீங்கள் சதம் அடிப்பீர்கள்” என்று ஆறுதல் கூறினார். அவரது ஆறுதல் வார்த்தை அடுத்த 2 நாட்களில் நிறைவேறியது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விஸ்வநாத் 137 ரன்களை விளாசினார். தன் முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் 13 சதங்களை விஸ்வநாத் அடித்துள்ளார். இதில் 12 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x