

எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் டி.நடராஜன் முக்கியமான சக்தியாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளருமான விவிஎஸ் லக்ஷ்மண் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைஸர்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக நடராஜன் இருந்தார். மொத்தம் 16 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் வீழ்த்தியிருந்தார். அணியில் பயிற்சியாளராக இருந்த லக்ஷ்மண், நடராஜன் குறித்துப் பேசியிருக்கிறார்.
"ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்துக்கு நடராஜன் தேர்வானதில் எனக்கு ஆச்சரியமில்லை. முதலில் வலைப்பயிற்சிக்கான பந்துவீச்சாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இடது கை பந்துவீச்சாளர் என்பதால் நடராஜன் முக்கிய சக்தியாக இருப்பார். இதனால்தான் அவரை அணியில் முழு நேர உறுப்பினராகச் சேர்த்துள்ளனர் என நினைக்கிறேன்.
ஐபிஎல் என்பதும் சிறந்த வீரர்கள் ஆடும் சர்வதேசத் தொடரைப் போலத்தான். அதனால் ஐபிஎல் தொடரில் அவர் ஆட்டத்தைப் பார்த்த பிறகு கண்டிப்பாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெறுவார் என்று உறுதியுடன் கூறுகிறேன். களத்தை ஒழுங்காக அறிந்து, சரியான விதத்தில் பந்து வீசி சிறப்பாகச் செயல்படுவார்.
புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் கலீல் அகமதுக்குப் பதிலாக நடராஜனை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். அணியில் தவிர்க்க முடியாதவராக மாறிவிட்டார். நடராஜன் யார்க்கருக்குப் பெயர் பெற்றுவிட்டார். ஆனால், அவர் பலவிதமான நுணுக்கங்களைத் தெரிந்தவர். அவற்றை ஐபிஎல் தொடரில் பயன்படுத்தவில்லை. புதிய பந்தில் விக்கெட் எடுக்கும் திறன் பெற்றவர் அவர்.
யார்க்கர்கள் வீசுவதுதான் மிகக் கடினம். ஆனால், அதைச் சரியாக வீசும் தன்னம்பிக்கை நடராஜனுக்கு இருக்கிறது. இதில் டி வில்லியர்ஸை அவர் வீழ்த்திய யார்க்கர்தான் மிகச் சிறந்தது. அவருக்கிருந்த தன்னம்பிக்கையை அது காட்டியது" என்று லக்ஷ்மண் பேசியுள்ளார்.
பணிச்சுமையையும், மனதையும் நடராஜன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் லக்ஷ்மண் அறிவுறுத்தியுள்ளார்.