

விளையாட்டுத் துறையில் இந்தியாவில் இருக்கும் முக்கியமான தம்பதிகளில் ரோனக் பண்டிட் - ஹீனா சித்து ஜோடியும் ஒன்று. இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடும் வீராங்கனைகளில் ஒருவர் ஹீனா சித்து. சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஹீனா சித்து பதக்கங்களாக வாங்கிக் குவிக்க, அதற்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குகிறார் அவரது கணவரும் பயிற்சியாளருமான ரோனக் பண்டிட்.
2012-ம் ஆண்டில் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான் ஹீனா சித்து, ரோனக் பண்டிட்டை சந்தித்தார். ஹீனாவுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த உக்ரைன் பயிற்சியாளர்தான் ரோனக்குக்கும் பயிற்சியாளர். ரோனக்கைப் பொறுத்தவரை அவர் அந்த ஒலிம்பிக்குக்கு தகுதி பெறவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளுக்காக தன்னை பட்டை தீட்டிக் கொள்ள உக்ரைன் பயிற்சியாளரிடம் வந்திருந்தார். வந்த இடத்தில் பயிற்சியுடன் சேர்ந்துரோனக் - ஹீனா சித்து ஜோடியின் காதலும் வளர்ந்தது.பயிற்சியாளர் சொல்லிக்கொடுப்பதை விட ரோனக்கின் அருகாமையும், உத்வேக வார்த்தைகளும் ஹீனாவுக்கு அதிக தெம்பைக் கொடுத்தன.
தன்னுடன் ரோனக்கும் லண்டன் வரவேண்டும் என்று விரும்பினார். ரோனக்கும் அதைத் தட்டாமல் சொந்த செலவில் லண்டன் சென்று அவருக்கு உற்சாகமூட்டினார். இந்த காலகட்டத்தில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அவர்களின் காதலைத் தெரிந்துகொண்ட ரோனக் பண்டிட்டின் தந்தை அசோக் பண்டிட், திருமணத்துக்கு மகிழ்ச்சியுடன் பச்சைக் கொடி காட்டினார். திருமணம் முடிந்ததும் ரோனக் பண்டிட் ஒரு முக்கிய முடிவை எடுத்தார். ‘இனி போட்டிகளில் பங்கேற்பதற்காக துப்பாக்கியை தொடுவதில்லை. என் மனைவியை ஒரு பெரிய துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆக்குவதே எனது லட்சியம்’ என்பதுதான் அந்த முடிவு. இந்த முடிவின் விளைவாக இன்று ஹீனா சித்து போட்டிகளில் பதக்கங்களாக குவிக்க, ஒரு பயிற்சியாளராக இருந்து அவரை மேலும் பட்டைதீட்டி வருகிறார் ரோனக்.