

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை தோற்கடித்தது. இதன் மூலம் 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள கொல்கத்தா 7 புள்ளி களுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் மிட்பீல்டில் இருந்து கோல் கம்பத்துக்கு வலது புறம் பறந்து வந்த பந்தை மிக அழகாகக் கட்டுப்படுத்திய கொல்கத்தா ஸ்டிரைக்கர் இயான் ஹியூம், அதை கோல் கம்பத்தை நோக்கி யடித்தார். அப்போது கேரளா கோல் கீப்பர் ஸ்டீபன் பைவாட்டர் அந்த பந்தை தடுக்க, அது அவ ருடைய கையில் இருந்து நழுவி முன்னோக்கி சென்றது. அப்போது திடீரென முன்னோக்கி பாய்ந்து வந்த கொல்கத்தா மிட்பீல்டர் அரட்டா ஸூமி அற்புதமாக கோலடித்தார்.
32-வது நிமிடத்தில் கேரள ஸ்டிரைக்கர் சான்செஸ் வாட் கோல் கம்பம் வரை பந்தை எடுத்துச் சென்றார். மிக அருகில் சென்றபோதும் அவருடைய ஷாட்டில் வேகமில்லாததால் மிக எளிதாக முறியடித்தார் கொல்கத்தா கோல் கீப்பர்.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் அபாரமாக ஆடிய கொல்கத்தா அணி 52-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. ஸ்டிரைக்கர் இயான் ஹியூம், இடதுபுறத்தில் இருந்து வலது புறத்தை நோக்கி கொடுத்த கிராஸை சரியாகப் பயன்படுத்திய மிட்பீல்டர் ஜேவி லாரா, கேரள பின்கள வீரர்கள் பெரோன், ரேமேஜ் ஆகியோரை மிக எளிதாக வீழ்த்தி அற்புதமாக இந்த கோலை அடித்தார்.
மறுமுனையில் தொடர்ந்து போராடிய கேரள அணி 80-வது நிமிடத்தில் ஆறுதல் கோலை அடித்தது. மிட்பீல்டில் இருந்து வந்த பந்தை கேரளத்தின் மாற்று பின்கள வீரர் சி.கே.வினீத் அற்புதமாக தலையால் முட்ட, அது கோல் கம்பத்தை நோக்கி சென்றது. ஆனால் அங்கு கோல் கீப்பர் இல்லாததால் டாக்னெல் மிக எளிதாக காலால் பந்தை தட்டிவிட்டு கோலடித்தார். இதன்பிறகு கோல் எதுவும் விழாததால் கொல்கத்தா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
இன்றைய ஆட்டம்: புனே-டெல்லி
இடம்: புனே நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜெயா மேக்ஸ்.