

பிரசவத்துக்குப் பிறகு மீண்டும் விளையாட முடியாமல் போகலாம் என்று தான் அதிகமாக அச்சப்பட்டதாக டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்திருப்பவர் செரீனா வில்லியம்ஸ். டிஸ்கவரி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் செரீனாவின் வாழ்க்கையைச் சொல்லும் ‘பீயிங் செரீனா’ என்கிற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதில் தனது மகள் பிறப்பதற்கு முன்னால் தன் மனதில் இருந்த அச்சம் குறித்து செரீனா பேசியுள்ளார்,
ஆஸ்திரேலியன் ஓப்பன் பட்டத்தை வென்ற பிறகு, தான் கர்ப்பமாக இருப்பதாக செரீனா அறிவித்தார். செப்டம்பர் 1ஆம் தேதி அவருக்கு மகள் பிறந்தார். நுரையீரல் ரத்தக் குழாயில் செரீனாவுக்கு அடைப்பு இருந்ததால் அறுவை சிகிச்சைக்குப் பிறகே குழந்தை பிறந்தது. பிரசவத்துக்குப் பின் மீண்டும் அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் 6 வாரங்கள் படுக்கையிலேயே இருந்தார்.
"என் மகளை நான் சந்திக்கும் வழியில் எவ்வளவு தடைகள் இருந்தன என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஆனால், அவற்றுக்கு அப்போது நான் உணர்ந்ததை விட இப்போது அதிக மதிப்பு உள்ளது. அதற்குக் காரணம் என் மகள்தான். ஆனாலும், அந்த அச்சத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. என்னால் முன்பைப் போல வலிமையாக மீண்டும் இருக்க முடியாதோ என்ற அச்சம், சிறந்த தாயாகவும், உலகில் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடியாதோ என்ற அச்சம் இருந்தது.
ஆனால், என் மகள் பிறப்பதற்கு முன்னாலேயே அவளுக்கான அறையை நாங்கள் தயார் செய்துவிட்டோம். அவள் கண்டிப்பாக ஆஸ்திரேலியன் ஓப்பன் தொடரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். நான் வெற்றி பெறுவதை என் உடல் தடுக்கவில்லை என்பதை அவள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
இப்படி நினைத்ததற்கு என்ன காரணம் என்றால், நாம் எந்த நிலையிலிருந்து வந்திருக்கிறோம் என்பதை நினைவுகூர்வது முக்கியம். கடினமாக உழைத்தால் மட்டுமே எதுவும் கிடைக்கும் என்ற நிலையில் இருந்த குடும்பத்தில் பிறந்தவள் நான். வளரும்போது குற்றவாளிக் குழுக்கள், கொள்ளை, கொலை, வீட்டுக்கு வெளியே கேட்ட துப்பாக்கிச் சத்தம் எனப் பல விஷயங்களுக்கு மத்தியில் அச்சத்துடன்தான் வளர்ந்தேன்.
பயப்பட நிறைய இருந்தன. விட்டு வர நிறைய இருந்தன. அந்த அச்சம்தான் எங்களைச் செலுத்தியது. நாங்கள் வெற்றி பெற முயல்வதை நிறுத்தியதே இல்லை. வளர முயல்வதை நிறுத்தியதில்லை" என்று செரீனா பேசியுள்ளார்.