என்னுடைய ஓய்வுநாளில் லாரா, மே.இ.தீவுகள் அளித்த பரிசு: முதல்முறையாக மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம்
சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம்
Updated on
1 min read

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டரும், லிட்டில் மாஸ்ட்டருமான சச்சின் டெண்டுல்கர், தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நாளில் மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியமும், பிரையன் லாராவும் அளித்த அன்புப் பரிசு குறித்து முதல்முறையாக மனம்திறந்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு, நவம்பர் 16-ம் தேதி கிரிக்கெட்டிலிருந்து சச்சின் டெண்டுல்கர் விடை பெற்றார். மும்பையில் நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடருடன் கிரிககெட்டுக்கு சச்சின் பிரியாவிடை கொடுத்தார். கடைசி டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் சேர்த்த சச்சின், 2-வது இன்னிங்ஸில் பேட் செய்யவில்லை.

கடந்த 1989-ம் ஆண்டு கிரிக்கெட்டில் தடம் பதித்த சச்சின் ஏறக்குறைய 24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் முடசூடா மன்னராக வலம்வந்தார். தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சின் விடைபெற்றார்.

சச்சின் ஓய்வு பெற்ற நாளன்று மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர் பிரையன் லாராவும் அளித்த நினைவுப் பரிசு குறித்து இதுவரை யாரிடமும் வெளியிடாமல் இருந்த சச்சின் முதல்முறையாக நேற்று மனம்திறந்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ என் மீது மதிப்பும், அன்பும் வைத்திருக்கும் மே.இ.தீவுகள் வாரியத்துக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

எனக்கு அளித்த அன்புப்பரிசுக்கு நன்றி. கடந்த 2013-ம் ஆண்டு இதே நாள் (நவம்பர்16) மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியமும், எனது நண்பர் பிரையன் லாராவும், கெயிலும் எனக்கு இந்த அற்புதமான ஸ்டீல் ட்ரம்பை பரிசாக வழங்கினர்.

இதுபோன்ற மிகச்சிறந்த பரிசு அளித்த அவர்களுக்கு நன்றியுள்ளவனாகவும், அவர்களின் அன்புக்கும், என் மீதான மரியாதைக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியக் கிரிக்கெட்டில் ஜாம்பவானாகத் திகழ்ந்த சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்கள் சேர்த்தார். இதில் 51 சதம், 68 அரைசதங்கள். பேட்டிங்கில் 53.78 சராசரி வைத்துள்ள சச்சினின் அதிகபட்சம் 248 நாட்அவுட் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in