

நவீன கிரிக்கெட்டின் பிராட்மேன் என்று சச்சினை சொல்ல லாம். இந்தியாவில் கிரிக்கெட் கடவுளாக போற்றப்பட்ட சச்சினைப் பார்த்து பயப்படாத பந்துவீச்சாளர்களே இல்லை.1989-ம் ஆண்டு 16 வயது சிறுவனாக சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த சச்சின், இந்தியாவுக்காக அடித்த ரன்கள் கணக்கில் அடங்காதவை. 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921ரன்கள், 463 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 18,426 ரன்கள் என்று ரன் இயந்திரமாய் செயல்பட்ட சச்சின், தன் துடிப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதைக் கட்டிப் போட்டார். பல சாதனைகளை முறியடித்தார்.
எந்த விஷயத்துக்கும் ஒரு முடிவு உண்டல்லவா? சச்சினின் கிரிக்கெட் பயணத்துக்கும் அந்த முடிவு வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் சச்சின். அவரது கடைசி போட்டி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்றது. பின்னாளில் இந்த நாளைப் பற்றி ரசிகர்களுக்கு சச்சின் எழுதியுள்ள கடிதத்தில், “ஓய்வைப் பற்றி நீண்ட நாட்களாக நான் நினைத்திருந்தாலும் அன்றைய நாளுக்காக என்னை நான் தயார்படுத்திக்கொள்ளவில்லை. அன்றைய தினம் மைதானத்துக்குள் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் ஏதோ ஒரு சோகம் என்னை அழுத்தியது. என் தொண்டைக்குள் ஏதோ அடைத்துக்கொள்வதைப் போல உணர்ந்தேன்.
அந்த நேரத்தில் பல விஷயங்கள் என் தலையை அழுத்தின. என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதை கட்டுப்படுத்துவதற்காக நான் போராடவும் இல்லை. கண்ணீரால் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேன். அந்த சமயத்தில் ஆச்சரியமளிக்கும் வகையில் என் மனதில் அமைதி பரவியது. நான் வலுப்பெற்றதைப் போல் உணர்ந்தேன். நான் பெற்ற எல்லாவற்றுக்கும் நன்றியுள்ளவனாக உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.