

2015-16 சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கும் பி பிரிவு போட்டியில் கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய தமிழக அணியும், பரோடா அணியும் மோதுகின்றன.
பரோடா அணி வலுவான பேட்டிங், பார்மில் இருக்கும் சுழற்பந்து வீச்சாளர்கள் என சமபலம் கொண்ட அணியாக இருந்தாலும், அந்த அணி போதிய அளவில் பயிற்சி போட்டிகளில் விளையாடாதது பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால் தமிழக அணியோ கடந்த 45 நாட்களாக புச்சி பாபு கோப்பை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் நேற்று தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டன. பரோடா கேப்டன் ஆதித்ய வாக்மோட் தனது அணியின் பேட்டிங்கின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார். குறிப்பாக அனுபவ வீரர்களான யூசுப் பதான், ஹார்டிக் பாண்டியா ஆகியோரை நம்பியிருக்கிறார்.
தமிழக அணியின் துணை கேப்டன் பாபா இந்திரஜித் கூறுகையில், “மைதானம் 2-வது நாளில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். நாங்கள் நேர்மறையாகவும், பொறுமையாகவும் செயல்பட்டு சிறப்பாக ஆட முயற்சிப்போம்” என்றார். தமிழக அணியில் எல்.பாலாஜி, வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக களமிறங்குகிறார். சங்கர் இந்தப் போட்டியில் விளையாடவில்லை.
கடந்த இரு சீசன்களிலும் தமிழக அணி, பரோடாவை வீழ்த்தியிருப்பது கூடுதல் பலமாகும். அதேநேரத்தில் பரோடா அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்வப்னில் சிங், மர்துஜா ஆகியோர் எப்படி பந்துவீசுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் ஆதிக்கம் இருக்கும்.
ஆடுகளத்தின் தன்மையை ஆராய்ந்த பிறகு பரோடா அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான யூசுப் பதான் பேசுகையில், “தமிழக அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. எங்கள் அணி பெரிய அளவுக்கு பார்மில் இல்லை என்றாலும், தமிழக சுழற்பந்து வீச் சாளர்களுக்கு கூடுதல் நெருக் கடியை ஏற்படுத்த முயற்சிப்போம்” என்றார்.
தமிழகம்:
அபினவ் முகுந்த் (கேப்டன்), பாபா அபராஜித், பிரசன்னா, தினேஷ் கார்த்திக், பாபா இந்திரஜித் (துணை கேப்டன்), விஜய் சங்கர், மலோலன் ரங்க ராஜன், கவுஷிக், ராஹித் எஸ்.ஷா, முகமது, சந்திரசேகர், விக்னேஷ், கவுஷிக் காந்தி.
பரோடா:
ஆதித்ய வாக்மோட் (கேப்டன்), தீபக் ஹூடா, யூசுப் பதான், ஹார்டிக் பாண்டியா, கேதார் தேவ்தார், ககன்தீப் சிங், பார்கவ் பட், பாபா ஷபி பதான், பினால் ஷா, முர்துஜா வஹோரா, மோனில் படேல், ஹிதேஷ் சோலங்கி, சாகர் மங்கலோர்கர், ஸ்வப்னில் சிங், பாகவ் படேல்.
போட்டி நேரம்: காலை 9.30