மற்ற அணி பவுலர்கள் விரைவில் அடுத்த கட்டத்துக்கு உயர்வடைகின்றனர்; நம் அணியில் இல்லை: தோனி

மற்ற அணி பவுலர்கள் விரைவில் அடுத்த கட்டத்துக்கு உயர்வடைகின்றனர்; நம் அணியில் இல்லை: தோனி
Updated on
2 min read

முதன் முதலாக இந்தியாவில் ஒருநாள் தொடரை 3-2 என்று வென்று சாதனை படைத்ததோடு, இந்திய அணியை குழிதோண்டி புதைத்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி குறித்து தோனி பேட்டியளித்தார்.

வங்கதேசத்துக்கு எதிராக படுமோசமாக தொடரை இழந்த பிறகு இப்போது தென் ஆப்பிரிக்க அணி இங்கு ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.

எங்களது ஆட்டம் மிக மோசமாக அமைந்தது, எங்களது இந்த ஆட்டத்தை நீங்கள் கணக்கில் சேர்க்க முடியாது என்றார் தோனி.

இந்த தோல்வி குறித்து தோனி கூறியதாவது:

"இது உண்மையான பேட்டிங் பிட்ச். ஸ்பின்னர்களுக்கு பந்துகள் திரும்பவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்கிறார்கள். ஆனால் பிட்சில் ஒரு உதவியும் இல்லாத போது பேட்ஸ்மெனை பின்னால் சென்று ஆட வைக்க முடியவில்லை. நல்ல வேகம் வீசக்கூடிய பவுலர்கள் இருந்தாலும், அவர்களாலும் பவுன்ஸ் செய்ய முடியவில்லை. ஏனெனில் நமது பவுலர்களால் பந்தின் தையலை தரையில் பட்டு எழுப்ப முடியவில்லை.

மிக அரிதாக நமது அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர். இதுதான் காரணம், முதல் 25 ஓவர்களை அவர்கள் பார்த்த பிறகே அவர்களை நிறுத்த முடியவில்லை. பவுண்டரிகள் அடிப்பதை தடுக்க முடியவில்லை.

அனைத்து உத்திகளும் நேற்று தோல்வியடைந்தன, யார்க்கர்கள், ஷார்ட் பிட்ச் பந்துகள், ஸ்பின்னர்கள் வைடாக வீசி பேட்ஸ்மெனை ரன் எடுக்க விடாமல் செய்வது என்று அனைத்தையும் முயன்றோம் ஆனால் பயனளிக்கவில்லை. இது போன்ற நாட்கள் ஏற்படுவதுண்டு. ஆனால், நாம் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும், அடுத்த முறை இத்தகைய பிட்ச் கிடைத்தால் எதிரணியினரை இவ்வளவு ரன்கள் எடுக்க அனுமதிக்கக் கூடாது. இலக்கைத் துரத்துவது என்பது ஒருபுறம் இருந்தாலும், எதிரணியினரை நிறுத்துவதும் அவசியம். சில கேட்ச்களையும் நாம் பிடிக்க வேண்டும்.

நாம் எப்போதும் 3 ஸ்பின்னர்களுடன் ஆட முடியாது. அதே வேளையில் பேட்டிங் பிரச்சினைகளையும் களைந்தாக வேண்டும். நடுவரிசை மற்றும் கீழ் வரிசையில் பேட்டிங் வலுவடைய வேண்டும். அதே போல் ஆட்டத்தின் எந்த தருணத்திலும் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் பவுலர்கள் வேண்டும்.

சீராக விளையாட நன்றாக ‘செட்டில்’ ஆன அணியாக இருக்க வேண்டும், நம் அணி ஓரளவுக்கு இன்னும் செட்டில் ஆகாத அணியாகவே உள்ளது.

அணிச்சேர்க்கை பற்றி நிறைய விவாதித்தோம். ஆனாலும் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்தால் ஆட்டத்தின் முடிவும் மாறாமலேயே போகும். நம்மிடையே வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லை. ஸ்டூவர்ட் பின்னியை முயற்சி செய்தோம், ஆனால் அதுவும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் நடப்பு இந்திய அணியில் அவர்தான் சிறந்த ஸ்விங் பவுலிங் ஆல் ரவுண்டர், இரண்டு சிறந்த ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர்கள் என்றால் அது ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர்கள்தான். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ இதுதான் சிறந்த அணி, இதனை அதிகபட்சமாக எப்படி பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த முடியும்.

மற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை நாம் பார்த்தோமானால், வேகப்பந்து வீச்சாளர்கள் வருகின்றனர், ஒன்று அல்லது 2 ஆண்டுகளில் அடுத்தக் கட்டத்துக்கு அவர்கள் உயர்ச்சி பெறுகின்றனர். விரைவில் அவர்கள் தங்களது பலம், பலவீனங்களை உணர்ந்து ஸ்ட்ரைக் பவுலர்களாக அந்த அணிகளில் மாறிவிடுகின்றனர். நம் பவுலர்களால் அவ்வாறு உயர்வு பெற முடியவில்லை. மேலும் ஒரு தனிப்பட்ட வீரர் மீது நம்பிக்கை வைத்து அவருக்காக நிறைய கால அவகாசம் தந்து, அதுவும் பயனளிக்காமல் போகும்போது, ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினோம், ஆனால் அவர்களும் ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர், இதனால் லைன் மற்றும் லெந்த்தில் வீசும் பவுலர்களை நாடினோம். மோஹித் சர்மா 3-வது வேகப்பந்து வீச்சாளராக இருக்கச் சிறந்தவர். இந்நிலையில் நமக்குச் சிறந்த அணிச்சேர்க்கை எது என்பதை தீர்மானிக்க வேண்டும். யார் கடைசி ஓவர்களில் நன்றாக வீசக்கூடியவர்கள், யார் நடு ஓவர்களை நன்றாக வீசக்கூடியவர்கள், யார் புதிய பந்தில் நன்றாக வீசக்கூடியவர் என்று பல விஷயங்களை தீர்மானிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக பார்த்து நிறைய வேகப்பந்து வீச்சாளர்களை முயற்சி செய்தோம், ஆனால் அவர்கள் நன்றாக வீசவில்லை. ஆனால் இவர்கள் வேறு வடிவத்தில் அதாவது ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்கள் அணிக்கு ஆடும்போதும், துலீப், தியோதர் உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பாக வீசியவர்களாகவே இருக்கின்றனர்.

நம் அணி மாற்றமடையும் காலக்கட்டத்தில் உள்ளது. சில நேரங்களில் இதற்கு கால அவகாசம் தேவைப்படும். ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் டாப் பவுலர்களாக இருப்பதற்கும் சர்வதேச கிரிக்கெட்டில் டாப் பவுலர்களாக இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

இந்தப் போட்டியில் ஸ்பின்னர்கள் மோசமாக வீசினார்கள் என்று கூறுவது நியாயமாகாது. அணியின் ஆட்டத்தில் உச்சமும், தாழ்வும் மாறி மாறி வருகிறது. ஆனால் இன்னும் நன்றாக ஆடியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த ஒரு போட்டி நம்மிடமிருந்து முழுதுமாக பறிக்கப்பட்ட போட்டியாக அமைந்தது"

இவ்வாறு கூறினார் தோனி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in