Published : 11 Nov 2020 05:33 PM
Last Updated : 11 Nov 2020 05:33 PM

ஆஸி. தொடருக்கு இந்திய அணியுடன் ரோஹித் சர்மா செல்லவில்லை: தீராத குழப்பம்

ஆஸ்திரேலியா தொடருக்காக துபாயிலிருந்து சிட்னி செல்லும் இந்திய அணியுடன் ரோஹித் சர்மா செல்ல மாட்டார். மாறாக பெங்களூரு வந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு சிகிச்சை பெற்று காயத்திலிருந்து பூரண குணமடையவிருக்கிறார்.

தொடக்கத்தில் காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடருக்கான எந்த ஒரு அணியிலும் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. நவம்பர் 27 முதல் ஜனவரி 19ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 3 டி20 , 3 ஒருநாள், 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. அக்டோபர் 18ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக இடது தொடையில் ரோஹித் காயமடைந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் 4-ல் விளையாடாமல் இருந்தார், இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை.

ஆனால் ரோஹித் திடீரென ஐபிஎல் போட்டியில் விளையாடி, இறுதிப் போட்டியில் வெளுத்துக் கட்டி காயத்திலிருந்து தான் மீண்டு விட்டதாக அறிவித்தார். இதனையடுத்து ஐபிஎல் இறுதிப் போட்டியன்றே பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் இருப்பார் என்று தெரிவித்தது.

இந்நிலையில் இந்திய அணியுடன் இன்று ரோஹித் சர்மா செல்ல மாட்டார் அவர் பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று உடற்தகுதி பெற்றவுடன் டிச.17ல் தொடங்கும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்குள் செல்வார் என்று கூறப்பட்டுள்ளது.

விராட் கோலி அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்தியா திரும்பி தன் முதல் குழந்தை பிறப்புக்காக மனைவியின் அருகில் இருக்க விடுப்பு வாங்கிக் கொண்டுள்ளார். அதனால் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு கோலி இருக்க மாட்டார்.

இப்போது துபாயிலிருந்து சிட்னி செல்லும் இந்திய அணி இருவார தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும். நவம்பர் 14ம் தேதி முதல் சிட்னியில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x