

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது.
முதல் இரு ஆட்டங்களிலும் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றிவிட்ட தென் ஆப்பிரிக்க அணி, இந்த ஆட்டத்திலும் வென்று இந்தியாவை ‘ஒயிட் வாஷ்’ ஆக்குவதில் தீவிரமாக உள்ளது. ஆனால் தொடர்ச்சியாக இரு ஆட்டங்களிலும் தோற்று ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கும் இந்திய அணி, ஆறுதல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
கட்டாக்கில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியின்போது இந்திய அணியின் மோசமான ஆட்டத்தை சகிக்க முடியாத ரசிகர்கள் மைதானத்தை நோக்கி பாட்டில் களை பறக்கவிட்டனர். இது இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா வின் லார்ட்ஸ் என்றழைக்கப்படும் கொல்கத்தாவில் 3-வது போட்டி நடைபெறுவதால் இங்கு சிறப்பாக ஆடாதபட்சத்தில் ரசிகர்களின் கோபத்துக்கு இந்திய வீரர்கள் ஆளாக நேரிடலாம்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்னதாக நடை பெறும் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலொழிய ஒருநாள் தொடரை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியாது.
ரஹானேவுக்கு வாய்ப்பு
இந்திய அணியைப் பொறுத்த வரையில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, ரெய்னா என வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், 5-வது பேட்ஸ் மேனாக இடம்பெற்ற அம்பட்டி ராயுடு கடந்த இரு போட்டிகளிலும் ஜொலிக்கவில்லை. குறிப்பாக கடந்த போட்டியில் ரபாடா வீசிய புல்டாஸில் ராயுடு ஸ்டெம்பை பறி கொடுத்தார். ரஹானேவை சேர்க்கா மல் ராயுடுவுக்கு வாய்ப்பு கொடுத்த கேப்டன் தோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார். எனவே இந்தப் போட்டியில் ராயுடுவுக்குப் பதிலாக ரஹானே இடம்பெறுவார் என தெரிகிறது.
நெருக்கடியில் தோனி
கேப்டன் தோனியின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு அமைய வில்லை. தர்மசாலாவில் நடை பெற்ற முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார். அந்தப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் தோனி களத்தில் நின்றபோதும் கடைசி 5 ஓவர்களில் இந்தியா 41 ரன்கள் மட்டுமே எடுத்தது. கட்டாக்கில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் வேக மாக ஆட்டமிழக்க, பின்வரிசையில் அணியை சரிவிலிருந்து மீட்க தோனி தவறினார்.
ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளின் தலைசிறந்த கேப்டனாக தோனி பார்க்கப்பட்டா லும், சமீப காலமாக அவருடைய ஆட்டம் மெச்சும்படியில்லை. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி அவருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி யிருக்கிறது.
சுழற்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் அஸ்வின் தென் ஆப்பிரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் அக்ஷர் படேலின் பந்துவீச்சு எடுபடவில்லை. எனவே அவருக்குப் பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்படலாம். இதே போல் ஸ்டூவர்ட் பின்னிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அவர் இடம் பெறும்பட்சத்தில் ஹர்பஜனுக்கு வாய்ப்பு கிடைக்காது. வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், மோஹித் சர்மா கூட்டணியை நம்பியுள்ளது இந்தியா.
பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சமபலம் கொண்டதாக திகழ்கிறது. டிவில்லியர்ஸ், கேப்டன் டூ பிளெஸ்ஸி, ஜே.பி.டுமினி, பெஹார்டியன், டேவிட் மில்லர் என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். குறிப்பாக டிவில்லியர்ஸ், டுமினி ஆகியோர் நல்ல பார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.
வேகப்பந்து வீச்சில் ரபாடா, கைல் அபாட், கிறிஸ் மோரிஸ், அல்பி மோர்கல் கூட்டணி அசத்தலாக பந்துவீசி வருகிறது. கடந்த போட்டி யில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அல்பி மோர்கல், இன் றைய போட்டியிலும் இந்திய பேட்ஸ் மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படு கிறது. சுழற்பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் மிரட்டி வருகிறார்.
இந்தியா:
எம்.எஸ்.தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, அக்ஷர் படேல், ஹர்பஜன் சிங், அஸ்வின், புவனேஸ்வர் குமார், மோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, அமித் மிஸ்ரா, ஸ்டூவர்ட் பின்னி, எஸ்.அரவிந்த்.
தென் ஆப்பிரிக்கா:
பாஃப் டூ பிளெஸ்ஸி (கேப்டன்), ஹசிம் ஆம்லா, ஏ.பி.டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), ஜே.பி.டுமினி, பர்ஹான் பெஹார்டியன், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், காகிஸோ ரபாடா, கைல் அபாட், அல்பி மோர்கல், இம்ரான் தாஹிர், குயின்டன் டி காக், எட்டி லீய், மெர்ச்சன்ட் டி லாஞ்சி, கயா ஜோன்டோ.
இந்தியாவை ‘ஒயிட் வாஷ்’ ஆக்குவோம்: டேவிட் மில்லர் சூளுரை
இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலும் வென்று அந்த அணியை ‘ஒயிட் வாஷ்’ ஆக்குவோம் என தென் ஆப்பிரிக்க மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: முதல் இரு ஆட்டங் களிலும் வென்றிருப்பது மிகப்பெரிய விஷயம். இப்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நாங்கள், நாளைய (இன்றைய) போட்டியிலும் வென்று 3-0 என தொடரைக் கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் நம்பிக்கையும், உத்வேகமும் மிக முக்கியமான விஷயம். நாங்கள் மிகச்சிறப்பாக தயாராகி இருப்பதாக நினைக்கிறேன். 3-வது போட்டியில் அனைத்து துறைகளிலும் இந்திய அணியை வீழ்த்த முயற்சிப்போம். அதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என நம்புகிறேன்.
உயர்வாக சொல்வதானால் தொடரை வென்றுவிட்டு 3-வது போட்டியில் ஆட கொல்கத்தாவுக்கு வந்திருப்பது அற்புதமான உணர்வை தருகிறது. டி20 தொடரை வென்றது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம். நாங்கள் சிறப்பாக ஆட வேண்டும் என்ற அதிகப்படியான எதிர்பார்ப்புகளோடு இங்கு வந்திருக்கிறோம். சிறப்பாக ஆடுவதற்காக கடுமையாக உழைத்தோம். டி20 போட்டியைப் பொறுத்தவரையில் இந்திய அணி மிகச்சிறந்த அணி. டி20 உலகக் கோப்பை போட்டி நெருங்கும் வேளையில் இந்திய அணியை வீழ்த்தியிருப்பது பெரும் நம்பிக்கையை தந்திருக்கிறது என்றார்.
போட்டி நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்