

ஐபிஎல் டி20 தொடரின் 13-வது சீசன் முடிவுக்கு வந்துள்ளது. துபாயில் இன்று நடைபெறும் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் அணி மோதுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணி 14 போட்டிகளில் 8 ஆட்டங்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணியிடம் தோற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, 2-வது தகுதிச் சுற்றில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
மும்பை அணி 14 போட்டிகளில் 9 ஆட்டங்களில் வென்று 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதலில் தகுதி பெற்றது. ப்ளே ஆஃப் சுற்றில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தொடர்ந்து 2-வது முறையாக மும்பை அணி தகுதி பெற்றது. ஒட்டுமொத்தமாக 6-வது முறையாக மும்பை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஐபிஎல் தொடரில் இந்தியாவில் நடத்துவதற்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. ரசிகர்களுக்கு அனுமதியின்றி, பயோ-பபுளில் வீரர்கள் அனைவரும் கொண்டுவரப்பட்டு விளையாடினர். பரிசுத்தொகை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் பாதியாகக் குறைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மொத்தப் பரிசுத்தொகையாக ரூ.32.5 கோடி வழங்கப்பட்டது. இதில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பெற்ற சிஎஸ்கே அணிக்கு ரூ.12.50 கோடியும் வழங்கப்பட்டது.
இந்த முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.25 கோடி வழங்கப்படும். ஏறக்குறைய கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் பரிசுத்தொகை பாதியாகக் குறைக்கப்பட்டது.
ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வி அடைந்த ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிக்கு தலா ரூ.4.3 கோடி வழங்கப்படும்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாதது, விளம்பரதாரர்கள் மாற்றம் போன்ற நிதி நெருக்கடி காரணமாகவே பரிசுத்தொகையும் குறைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.