Published : 12 Oct 2015 02:44 PM
Last Updated : 12 Oct 2015 02:44 PM

தோல்வியடைந்த விரட்டல்: பொறுப்பேற்கும் தோனி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கான்பூரில் வெற்றி பெறும் நிலையிலிருந்து இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து தோனி ஏமாற்றம் தெரிவித்ததோடு, தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்காதது குறித்தும் வருந்தினார்.

ஒரு ஓவர், வெற்றிக்குத் தேவை 11 ரன்கள், வீசுவது 20 வயது, அனுபவக் குறைவான ரபாதா, பேட்டிங் முனையிலோ பினிஷிங்குக்கு 'பெயர் போன' கேப்டன் தோனி. அனைவரும் எதிர்பார்த்தது என்ன? நிச்சயம் தோனி வென்று விடுவார் என்றே. ஆனால் அதுவரையில் ஸ்கோர் போர்டை நகர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பவுண்டரி பந்துகளையும் ஏன் புல்டாஸ்களையும் கூட ஒன்று அல்லது 2 ரன்கள் என்று எடுத்தார் தோனி. அப்படியிருந்தும் அவரால் சிக்சர்களை அடித்திருக்க முடியும், ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் பேட்டிங் முறைகளை படம்பிடித்து வைத்துள்ளனர், எனவே அவருக்கு எப்படி வீசுவது என்பது இப்போதெல்லாம் புதிய பவுலர்களுக்கும் அத்துப்படியான ஒன்று. தோனி தனது அடி முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் விரும்பும் அளவில் இனி ஒருவரும் அவருக்கு பந்து வீசப்போவதில்லை, குறைந்தது விவரம் தெரிந்த அணிகள் இனி தோனி விரும்பும் அளவில் வீசாது என்பது உறுதி. சரி தோனி கூறியதற்கு வருவோம்:

"ஆம்! குறிப்பாக பின்னால் களமிறங்கும் போது தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டியதுதான், ஏனெனில் நிறைய போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்திருக்கிறோம், இந்நிலையில் வெற்றிகரமாக முடிக்க முடியாத போட்டிகளை ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பர். ஒன்று இங்கிலாந்துக்கு எதிராக பிறகு இந்த ஆட்டம், மற்றொன்று சில ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கைக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டி.

தனிப்பட்ட முறையில் கூற வேண்டுமென்றால், 40-வது ஓவர் நெருங்கும் தறுவாயில் அதற்கு முன்னதான சில ஓவர்களில் ரன்கள் அவசியம். பெரிய ஷாட்களை ஆடியிருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை, ஆனால் இன்னும் கொஞ்சம் கூடுதல் ரன்களை அந்த ஓவரில் எடுத்திருக்க வேண்டும்...

அஸ்வின் காயம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து...

அஸ்வினின் பந்து வீச்சை இழந்தது மிக முக்கியமானதாகும். அவர் காயமடைந்தார், அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் ஆட்டம் அப்போதுதான் சூடுபிடித்துக் கொண்டிருந்தது, நாங்கள் ரன்களை விட்டுக் கொடுக்காமல் வீசிக் கொண்டிருந்தோம். ஆனால் அதன் பிறகு ஸ்டூவர்ட் பின்னி, ரெய்னா ஆகியோர் ஓவர்களில் அதிகம் என்று கூற முடியாவிட்டாலும் ஓரளவுக்கு ரன்கள் எடுக்கப்பட்டது. பிறகு இறுதி ஓவர்கள் நன்றாகவே இல்லை.

இன்னிங்ஸை தொடங்கியது, ரோஹித், ரஹானே பார்ட்னர்ஷிப், சதம் அடித்த பிறகு ரோஹித் ஆடிய விதம், எல்லாம் பாசிட்டிவ்வாக பார்க்க வேண்டிய அம்சங்கள்.

பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் 30-35 ஓவர்கள் நன்றாக அமைந்தன. 35 ஓவர்களுக்கு அருகில் வரை நன்றாக பேட் செய்தோம். ஆனாலும் இன்னும் சில பகுதிகளில் உழைக்க வேண்டிய தேவை உள்ளது.

கடைசியில் சுலபமான பணியாக அமையவில்லை. எப்போதும் ஷாட்கள் நமக்கு சாதகமாக அமையாது. அதுவும் பெரிய ஷாட்கள் ஆடும் போது எப்போதும் நமக்கு சாதகமாக இருக்காது. சில சமயங்களில் நல்ல பிட்சாக இருக்கும், பந்துகள் மட்டையை நோக்கி நன்றாக வரும், வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி அடித்து ஆடலாம், ஆனால் கான்பூர் விக்கெட்டில் சராசரி பவுன்ஸ் என்பது தாழ்வாக இருந்தது. பந்துகள் பவுன்ஸ் ஆகவில்லை.

பந்துவீச்சு இறுதி ஓவர்களில் சரியாக அமையாதது ஏமாற்றமளிக்கிறது. ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. யார்க்கர்களை இன்னும் கொஞ்சம் நன்றாக வீசியிருக்கலாம் ஏன், ஷார்ட் ஆஃப் லெந்த் கூட வீசியிருக்கலாம், பந்தின் தையலை களத்தில் பட்டு எகிறுமாறு வீசியிருக்கலாம், ஆனால் இவற்றை நம்மால் செய்ய முடியவில்லை.

பிட்சில் ஏதோ விதத்தில் உதவி இருந்தால் அதிக ரன்கள் கொடுக்கக் கூடாது என்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும், 2 ஒவர்களில் 40 ரன்கள் பக்கம் வந்தது. இது மிகப்பெரிய ரன்கள், இது எந்த வடிவமாக இருந்தாலும் சரி.

ஆனால் பேட்டிங் நன்றாகவே உள்ளது, ரஹானே 3-ம் நிலை, பிறகு விராட் கோலி, பிறகு நான், ரெய்னா, பின்னி, இது ஒரு செட்டில் ஆன வரிசையாகவே எனக்குப் படுகிறது. அனுபவமும், ஆற்றலும் உள்ள இந்த வரிசை பெரிய இலக்குகளை விரட்ட முடியும் என்றே நான் கருதுகிறேன். ரஹானே 3-ம் நிலையில் இறங்குவது பலம் கூட்டியுள்ளது”

இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x