Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM

ஐபிஎல் தொடரில் இன்று இறுதி ஆட்டம்; 5–வது முறையாக பட்டம் வெல்லும் கனவில் மும்பை இந்தியன்ஸ்: முட்டுக்கட்டை போடுமா டெல்லி கேபிடல்ஸ்?

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று இரவு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. அந்த அணி 2013, 2015, 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. தற்போது 5-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.

பேட்டிங்கில் குயிண்டன் டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கெய்ரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அசுரபலம் சேர்க்கின்றனர். பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, டிரெண்ட் போல்ட் வேகக்கூட்டணி டெல்லி பேட்ஸ்மேன்களை பதம்பார்க்கக்கூடும். சுழலில் ராகுல் சஹார், கிருணல் பாண்டியா அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 13 வருட ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக தற்போதுதான் இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளது.

பேட்டிங்கில் ஷிகர் தவண் சிறந்த பார்மில் உள்ளார். 2-வது தகுதி சுற்றில் மார்கஸ் ஸ்டாயினிஸ் தொடக்க வீரராக களமிறங்கியது நல்ல பலனை கொடுத்தது. ஸ்ரேயஸ் ஐயர், சிம்ரன் ஹெட்மையர், அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த், அக்சர்படேல் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

பந்து வீச்சில் காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் மும்பை பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். இறுதிப் போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். 2-வது இடம் பெறும் அணி ரூ.6.25 கோடியை பெறும்.

இன்றைய ஆட்டம்

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x