

ஐபிஎல் 2020-யில் டெல்லி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பார்முக்கு வரவில்லை. டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் அவருடைய முந்தைய சுயத்தின் தேய்ந்து போன நிழல் போல்தான் தெரிகிறார்.
இந்த ஐபில் தொடரில் ரிஷப் பந்த் 13 இன்னிங்ஸ்களில் 287 ரன்களையே எடுத்துள்ளார், அதிகபட்ச ஸ்கோர் 38, ஸ்ட்ரைக் ரேட் அதலபாதாளத்துக்குச் சென்று 109 ஆக உள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலியா இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் பிராட் ஹாக், ரிக்கி பாண்டிங்கிற்கு ஆலோசனை கூறுகையில், “ரிஷப் பந்த்தை இந்த ஆண்டு கொஞ்சம் மரபு ரீதியான கிரிக்கெட்டை ஆடுமாறு பாண்டிங் கூறியிருக்கிறார் போல் தெரிகிறது. இன்னிங்ஸ் முழுதும் பந்த் ஆட வேண்டும் என்று பாண்டிங் அறிவுரை வழங்கியிருக்லாம் என்றே தெரிகிறது.
ஆனால் ரிஷப் பந்த் ஒரு சிறந்த கேளிக்கை அளிக்கும் வீரர், அவர் களமிறங்கி எந்த ஒரு பந்து வீச்சையும் அனாயசமாக ஆடக்கூடியவர். அவரைப் போய் கட்டிப்போட்டால் எப்படி?
கடந்த 2 தொடர்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட்டைப் பாருங்கள் 150க்கும் மேல். எதிரணியிடமிருந்து ஆட்டத்தை தன் அணிப்பக்கம் வெகு சுலபமாக ஒரு சில பந்துகளில் திருப்பக் கூடியவர் ரிஷப் பந்த்.
அடுத்த போட்டி முக்கியமான இறுதிப் போட்டி இதிலாவது அவரது விலங்குகளை பாண்டிங் கழற்றி விட்டு சுதந்திரமாக ஆடச்செய்ய வேண்டும். தயவு செய்து இதைச் செய்யுங்கள் ரிக்கி பாண்டிங். ரிஷப் பந்த்தின் சிறந்த ஆட்டத்தைப் பார்க்க விரும்புகிறோம்” என்று பிராட் ஹாக் யூடியூப் சேனல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.