

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியை வெளியேற்று மும்பைக்கு எதிரான இறுதிப் போட்டியில் டெல்லி மோதுகிறது.
நேற்று மிக அருமையாக அய்யர், பாண்டிங் கலந்தாலோசித்து தொடக்கத்தில் ஸ்டாய்னிஸையும் தவனையும் இறக்கி விட்டனர். இவர்கள் ஓவருக்கு 11 ரன்கள் வரை சராசரியாக அடித்து எழுச்சித் தொடக்கம் கொடுத்தனர்.
ஆட்ட நாயகன் ஸ்டாய்னிச் 38 ரன்களை வெளுத்து வாங்கியதோடு, ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளையும் பிறகு கடைசியில் முக்கியமான கட்டத்தில் கேன் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி ஆல்ரவுண்ட் அசத்தல் வீரராகத் திகழ்ந்தார்.
இந்நிலையில் ஆட்டம் முடிந்து ஸ்ரேயஸ் அய்யர் கூறியது:
அருமை. இதுதான் சிறந்த உணர்வு. நிறைய ஏற்ற இறக்கங்கள். ஆனாலும் ஒரு குடும்பம் போன்று ஒருங்கிணைந்து செயல் பட்டோம். கேப்டனாக நிறைய பொறுப்பு வருகிறது இதோடு பேட்ஸ்மெனாக சீராக ஆட வேண்டியிருக்கிறது.
ஆனால் பயிற்சியாளர்கள், உரிமையாளர்களிடமிருந்து எனக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்கிறது. உண்மையில் இத்தகைய அருமையான அணி அமைய கொடுத்து வைத்திருக்கிறேன்.
உணர்வுகள் உயர்ச்சியும் தாழ்ச்சியும் கண்டன. எப்போதும் ஒரே மாதிரியான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாது. அணியை மாற்றவும் குறைக்கவும் ஏற்றவும் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. அடுத்த போட்டியிலும் மாற்றம் வரவே செய்யும். நாங்கள் இன்னும் சுதந்திரமாக ஆட வேண்டும். அதே வேளையில் பொறுமையும் காக்க வேண்டும்.
நேற்றைய ரன் எண்ணிக்கை (189) திருப்திகரமானதே. ஓவருக்கு 10 ரன்கள் என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டிருந்தோம். ரஷீத்கான் அபாயகரமானவர் அதனால் அவர் ஓவர்களை எச்சரிக்கையுடன் ஆடி முடிப்பது என்று நினைத்தோம்.
தொடக்க கூட்டணி சரியாக அமையவில்லை, அதனால்தான் ஸ்டாய்னிஸை இறக்கி விட்டோம், மேலும் எங்களுக்கு ஒரு ராக்கெட் தொடக்கம் தேவைப்பட்டது, எனவே ஸ்டாய்னிஸ் அதிகப் பந்துகளை ஆடினால் நிச்சயம் அவர் ரன் விகிதத்தை ஏற்றுவார் என்ற நம்பிக்கை இருந்தது.
இவ்வாறு கூறினார் ஸ்ரேயஸ் அய்யர்.