

அடுத்த 6 மாதங்களில் அதாவது ஏப்ரல், மே மாதங்களில் அடுத்த ஐபிஎல் டி20 தொடர் நடத்தப்படும். அது இந்தியாவில்தான் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக 13ஆம் சீசன் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் டி20 தொடரும் ஏறக்குறைய முடியும் தறுவாயில் வந்துவிட்டது. வரும் 10-ம் தேதியுடன் ஐபிஎல் தொடர் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் நடத்தப்படுமா அல்லது கரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இதுகுறித்த சந்தேகங்களுக்கு விரிவாக இந்தியா டுடே சேனலில் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
''2021ஆம் ஆண்டில் 14ஆம் ஐபிஎல் சீசன் வழக்கம் போல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும். இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அடுத்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படாது. இப்போது நடத்துவது என்பது தற்காலிக ஏற்பாடு. அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசன் இந்தியாவில்தான் நடத்தப்படும்
இங்கிலாந்து அணியும் இந்தியாவுக்கு வந்து விளையாடவுள்ளது. ஜனவரி மாதத்திலிருந்து ரஞ்சிக் கோப்பைத் தொடர் நடக்க உள்ளது. அனைத்தையும் பயோ- பபுளில் கொண்டு வந்து நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
பிசிசிஐ சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரைக் கரோனா அச்சத்துக்கு மத்தியில் சிறப்பாக நடத்தியுள்ளோம். மிகவும் தரமான, கடும் சவால்கள் நிறைந்த போட்டிகளையும் வழங்கியுள்ளோம். இதற்குக் காரணம் ரசிகர்கள்தான்.
ரசிகர்கள் தரமான கிரிக்கெட்டை ரசிப்பதால்தான், சர்வதேச தரத்திலான வீரர்கள் விளையாடுகிறார்கள். ரசிகர்களால்தான் இந்தத் தொடர் வெற்றி பெற்றுள்ளது.
இதேபோல பல்வேறு நாடுகளிலும் தரமான டி20 தொடர் லீக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு போட்டித் தொடர் வெற்றி பெறுகிறது என்றால் ரசிகர்கள் பார்ப்பதால் மட்டும் வெற்றியடையாது. தரமான வீரர்கள் சேர்க்கப்பட வேண்டும்''.
இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.