Published : 08 Nov 2020 01:00 PM
Last Updated : 08 Nov 2020 01:00 PM

கோலியைக் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டால் ஆர்சிபி கோப்பையை வென்றுவிடுமா?- சேவாக் ஆதரவு

ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை நீக்க அணி நிர்வாகம் முடிவு எடுத்தால் அது தவறானது. கோலியை நீக்கினால் மட்டும் ஆர்சிபி அணி கோப்பையை வென்றுவிடுமா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பி, கோலிக்கு ஆதரவு அளித்துள்ளார்.

அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்தத் தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியது.

கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பின் இந்த முறைதான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் ஆர்சிபி அணி வந்தது. அதிலும் 2 முறை 8-வது இடத்தையும், ஒருமுறை 6-வது இடத்தையும் ஆர்சிபி அணி பிடித்து மோசமாக விளையாடியது.

கடந்த 8 சீசன்களுக்கு ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தும். இதுவரை 3 முறைதான் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்குச் சென்றுள்ளது. ஒருமுறை கூட கோலி தலைமையில் இதுவரை கோப்பையை வெல்லவில்லை.

ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி மோசமாகச் செயல்பட்டு வருவதால் அவரை நீக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர், முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆகியோர் கோரியுள்ளனர். இந்நிலையில் கோலியை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கக் கூடாது என்று முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு வீரேந்திர சேவாக் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''ஒரு கேப்டனுக்கு அவரைப் போல் அவரின் அணியும் சிறந்ததாக இருக்க வேண்டும். இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது, அவரால் சிறப்பாகச் செயல்பட்டு, ஒருநாள், டி20 டெஸ்ட் போட்டிகளில் வெல்ல முடிகிறது. ஆனால், ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இருக்கும்போது, கோலியின் அணியால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை.

ஒரு நல்ல கேப்டனுக்கு அணி சிறப்பாக இருத்தல் முக்கியமான அம்சம். ஆதலால், ஆர்சிபி அணி நிர்வாகம் கோலியை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கும் முடிவைக் கைவிட்டு, அணியை எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் அக்கறை காட்ட வேண்டும். கேப்டன் பொறுப்பிலிருந்து கோலியை நீக்கினால் மட்டும் ஆர்சிபி அணி கோப்பையை வென்றுவிடுமா?

எந்தெந்த வீரர்களைச் சேர்த்தால் அணியின் செயல்பாடு அதிகரிக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆர்சிபி அணிக்கு நல்ல சிறந்த பேட்டிங் வரிசையும், சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களும், கீழ் வரிசையில் ஓரளவுக்கு பேட் செய்யக்கூடிய பேட்ஸ்மேன்களும் அவசியம் தேவை. கோலி, டிவில்லியர்ஸ், படிக்கல் ஆகியோர் அடுத்த ஆண்டு சீசனில் ஏதேனும் பெரிய சாதனை நிகழ்த்த இவர்களோடு நல்ல பேட்ஸ்மேன்கள் தேவை.

ஒவ்வொரு அணியிலும் நல்ல செட்டில் ஆகிய பேட்டிங் வரிசை இருக்கிறது. ஆனால், ஆர்சிபி அணியில் மட்டும் அந்த பேட்டிங் வரிசையில்லை. விராட் கோலி, டிவில்லியர்ஸ் தவிர்த்து மேல்வரிசையிலும், கீழ்வரிசையிலும் பேட்ஸ்மேன் இல்லை.

படிக்கல்லுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்க நல்ல தொடக்க ஆட்டக்காரர் தேவை, அதேபோல கீழ்நிலையில் ஆடவும் நல்ல பேட்ஸ்மேன் தேவை. ஏறக்குறைய 5 நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தாலே போதும், ஆட்டத்தில் வெற்றி பெற முடியும். இதேபோலவே அந்த அணியில் இருக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளரகள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்''.

இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x