Last Updated : 07 Nov, 2020 12:23 PM

 

Published : 07 Nov 2020 12:23 PM
Last Updated : 07 Nov 2020 12:23 PM

8 ஆண்டுகளாக ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை; விராட் கோலியைக் கேப்டன் பதவியிலிருந்து நீக்குங்கள்; தோனி, ரோஹித்தோடு ஒப்பிடக்கூடாது: கவுதம் கம்பீர் விளாசல்

ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி: படம் உதவி |ட்விட்டர்.

புதுடெல்லி

ஆர்சிபி அணியின் கேப்டனாக 8 ஆண்டுகளாக இருக்கும் கோலி, ஒருமுறை கூட கோப்பையை அணிக்காக வென்று கொடுக்க முடியவில்லை. கேப்டன் பதவி மீதான நம்பகத்தன்மைக்கு கோலி பொறுப்பேற்க வேண்டும். இல்லாவிட்டால், கேப்டன் பதவியிலிருந்து முதலில் விராட் கோலியை நீக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்தத் தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியது.

கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின் இந்த முறைதான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் ஆர்சிபி அணி வந்தது. அதிலும் 2 முறை 8-வது இடத்தையும், ஒருமுறை 6-வது இடத்தையும் ஆர்சிபி அணி பிடித்து மோசமாக விளையாடியது.

விராட் கோலி கடந்த 8 சீசன்களுக்கு ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இதுவரை 3 முறைதான் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்குச் சென்று, தோல்வி அடைந்துள்ளது. ஒருமுறை கூட கோலி தலைமையில் இதுவரை கோப்பையை வெல்லவில்லை.


ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி மோசமாகச் செயல்பட்டு வருவதால் அவரை நீக்க வேண்டுமா என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், கிரிக் இன்ஃபோ தளத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

"நிச்சயமாக, ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட வேண்டும். ஏனென்றால் கேப்டன் பதவி மீதான நம்பகத்தன்மை போய்விட்டது. 8 ஆண்டுகளாக கேப்டனாக இருக்கும் கோலியால் ஒருமுறை கூட கோப்பையை அணிக்கு வென்று கொடுக்க முடியவில்லை.

இப்படி 8 ஆண்டுகள் ஒரே அணிக்கு கேப்டனாக இருப்பவர் ஒருவர் பெயரைச் சொல்லுங்கள். எந்த வீரரையாவது காட்டுங்கள் பார்க்கலாம். 8 ஆண்டுகளாக அணிக்குக் கோப்பையை வென்று கொடுக்காமல் ஒரு கேப்டன் அணியில் தொடர்கிறார்.

இது கேப்டனின் நம்பகத்தன்மை தொடர்புடையது. இந்தத் தோல்விக்கு கேப்டனாக இருக்கும் கோலி பொறுப்பேற்க வேண்டும். இது ஒரு தோல்வி என்றால் பரவாயில்லை, தொடர்ந்து 8 முறை இதுபோன்ற தோல்விகளை கோலி அணிக்குக் கொடுத்துள்ளார். இனிமேலாவது, கோலி, தனது கைகளை உயர்த்தி தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்ல வேண்டும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 2 ஆண்டுகள்தான் ரவிச்சந்திர அஸ்வின் கேப்டனாக இருந்தார். அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியுமா? அவரால் எதிர்பார்த்த முடிவைக் கொடுக்க முடியவில்லை என்பதால் நீக்கப்பட்டார். ஆனால், 8 ஆண்டுகளாக ஒரு அணிக்கு கோலி கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.


தோனி, ரோஹித் சர்மா நீண்டகாலமாக சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகத் தொடர்கிறார்களே என்று கேட்கலாம். ஆனால், ரோஹித், தோனியுடன் கோலியை ஒப்பிடாதீர்கள். தோனி 3 கோப்பைகளை சிஎஸ்கே அணிக்காக வென்று கொடுத்துள்ளார், 4 சாம்பியன் பட்டங்களை மும்பை அணிக்காக ரோஹித் சர்மா வென்று கொடுத்துள்ளார். அதனால்தான் அவர்களால் கேப்டன் பதவியில் நீடிக்க முடிகிறது. அவர்கள் செய்துகாட்டினார்கள். கோலியால் என்ன முடிந்தது.

ஒருவேளை ரோஹித் சர்மா இதுபோன்று 8 ஆண்டுகளாக மும்பை அணியில் கோப்பை வென்று கொடுக்காமல் இருந்தால் நிச்சயம் அணியில் நீடித்திருக்க முடியாது, அவர் பதவி எப்போதோ பறிக்கப்பட்டு இருக்கும். வெவ்வேறு விதமான வீரருக்கு, வெவ்வேறு விதமான அளவுகோல்கள் இருக்கின்றன.

விராட் கோலி என்பவர் அணியின் கேப்டன். வெற்றி பெறும்போது அணியின் பாராட்டுகளைப் பெற எவ்வாறு தகுதியானவரோ அதேபோன்ற விமர்சனங்கள் வரும்போது எதிர்கொள்ள வேண்டும்.

விராட் கோலி அடிக்கடி கூறுவது, நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவோம், தகுதி பெற்றுவிட்டோம் என்று கூறினார். உண்மையில் அதன் அர்த்தம் அதுவல்ல. நீங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவே இல்லை.

கடந்த 4 அல்லது 5 போட்டிகளைப் பாருங்கள். என்ன நடந்தது, மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் என்ன நடந்தது, ஷைனியின் அருமையான பந்துவீச்சால்தான் ஆர்சிபி வென்றது. மற்றவகையில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு வரத் தகுதியில்லாத அணி.

8 ஆண்டுகள் என்பது நீண்டகாலம். கோலி அனுபவம் இல்லாத வீரர் அல்ல. இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கிறார். எந்த அணிக்கு கேப்டனாக இருந்தாலும், அவரால் வெற்றியை வழங்க முடியும். ஆனால், இதில் வழங்கவில்லை.

விராட் கோலி இந்தப் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கியது வியப்பாக இருக்கிறது. தொடக்க வீரராகக் களமிறங்க வேண்டும் என முடிவு செய்தால், முதல் போட்டியிலிந்து செய்திருக்க வேண்டும். கோலி தொடக்க வீரராகக் களமிறங்கும்போது, நடுவரிசைக்கு நல்ல வீரரை ஏலத்தில் எடுத்திருக்க முடியும். ஆர்சிபி அணி என்றாலே மீண்டும் கோலி, டிவில்லியர்ஸ் என்று சுற்றிச்சுற்றி வருகிறது.

இந்த முறை டிவில்லியர்ஸ் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடியதால், ப்ளே ஆஃப் சுற்றுவரை ஆர்சிபி வர முடிந்தது. ஒருவேளை டிவில்லியர்ஸுக்கு மோசமான சீசனாக இது மாறியிருந்தால், ஆர்சிபி அணியின் நிலை என்னவாகியிருக்கும். ஆர்சிபி அணி வென்ற மொத்தம் 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெல்ல டிவில்லியர்ஸ்தான் காரணம். ஒரு அணியாக இருந்து கூட்டு உழைப்பாக ஏதும் செய்யவில்லை. கடந்த ஆண்டு என்ன செய்தார்களோ, அதைத்தான் செய்தார்கள்''.

இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x