Last Updated : 07 Nov, 2020 07:39 AM

 

Published : 07 Nov 2020 07:39 AM
Last Updated : 07 Nov 2020 07:39 AM

வெளியேறியது ஆர்சிபி: சன்ரைசர்ஸ் 'த்ரில்' வெற்றிக்கு காரணமான 'இரு டெஸ்ட் கேப்டன்கள்': டெல்லியுடன் வார்னர் படை நாளை மோதல்

சன்ரைசர்ஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த வில்லியம்ஸன், ஹோல்டர் : படம் உதவி ட்விட்டர்

அபு தாபி


வில்லியம்ஸன், ஜேஸன் ஹோல்டர் ஆகிய இரு டெஸ்ட் கேப்டன்களின் அனுபவம், நிதானமான பேட்டிங் ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்தது. 132 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லியுடன் மோதல்

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி நாளை நடக்கும் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால், இறுதி ஆட்டத்தில் மும்பை அணியுடன் மோதும்.

சன்ரைசர்ஸ் அணி தொடர்ச்சியாக பெறும் 4-வது வெற்றியாகும். இந்த 4 வெற்றிகளும் டாப் 3 வரிசையில் உள்ள மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு எதிராகக் கிடைத்தவை. அதிலும் ஆர்சிபி அணியை 2-வது முறையாக நேற்று வீழ்த்தியுள்ளது சன்ரைசர்ஸ் அணி.

தக்கவைக்கவில்லை

ஆனால், கோலி தலைமையிலான ஆர்சிபி அணி கடந்த 4 ஆண்டுகளுக்குப்பின் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்புக் கிடைத்தும் அதை கோட்டைவிட்டு வெளியேறியது. கோலி தலைமையிலான அணி தொடர்ந்து சந்தி்த்த 5-வது தோல்வி இதுவாகும். ஏற்கெனவே பெற்ற வெற்றிகளின் அதிர்ஷ்டத்தால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஆர்சிபி அணி அதைத் தக்கவைக்தத் தெரியவில்லை.

அமைதியான கேப்டன்கள்

சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு பந்துவீ்ச்சாளர்களும் காரணம் என்றாலும், அதைவிட, இரு டெஸ்ட் கேப்டன்களின் பேட்டிங்தான் அணியை த்ரில் வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

நியூஸிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் கேன் வில்லியம்ஸன், மே.இ.தீவுகள் அணியின் டெஸ்ட் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் ஆகிய இரு அனுபவமிக்க, சர்வதேச தரமுள்ள பேட்ஸ்மேன்களின் ஆட்டம் எந்தவிதத்திலும் சோடைபோகவில்லை.

தங்கள் நாட்டுக்காக விளையாடும்போதுகூட களத்தில் இரு கேப்டன்களும் எப்போதுமே அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருப்பார்கள். அதேபோல, நேற்றைய ஆட்டத்திலும் கடும் நெருக்கடியான கட்டத்திலும்கூட மிகவும் அனாசயமாக சூழலைக் கையாண்டனர்.

அதிலும் கடைசி 4 பந்துகளில் 8 ரன்கள் வெற்றிக்குத் தேவை. எந்தவிதமான பதற்றமும் இன்றி ஷைனி பந்தில் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை இடம்பார்த்து அடித்து வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஹோல்டரின் ஆட்டம் பாராட்டுக்குரியது.

ஹோல்டர் வருகை

அதிலும் சன்ரைசர்ஸ் அணியை கவனித்துப் பார்த்தால், ஹோல்டர் அணிக்குள் வந்தபின்புதான் அந்த அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வருகிறது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீ்ச்சிலும் ஹோல்டர் நேற்று கலக்கினார். 4 ஓவர்கள் வீசிய ஹோல்டர் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் முக்கியமான கோலி, படிக்கல் விக்கெட்டை சாய்த்தது ஹோல்டர்தான்.

ஆட்டநாயகன் வில்லியம்ஸன்

வில்லியம்ஸன் தொடக்கத்தில் நிதானமாக ஆடி, அதன்பின் அதிரடிக்கு மாறினார். வில்லியம்ஸன் களமிறங்கும்போது வெற்றிக்கு ஓவருக்கு 10 ரன்ரேட் தேவைப்பட்டது. ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளில் பவுண்டரி, சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை 8 ரன்களுக்குள் கொண்டு வந்தார். 44 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வில்லியம்ஸனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரை, பேட்டிங் வலிமை மிக்க ஆர்சிபி அணியை 131 ரன்களுக்குள் சுருட்டியதற்கு பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டு கொடுத்தே தீர வேண்டும். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் நன்கு ஒத்துழைக்கும் , இதில் அதிகமான ரன்களை ஸ்கோர் செய்வது கடினம் என்பதை வார்னர் அறிந்துதான் டாஸ் வென்று பீ்ல்டிங்கைத் தேர்வு செய்தார்.

நடராஜன் அபராதம்

இதை நன்கு பயன்படுத்திக்கொண்ட சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர்.

தமிழக வீரர் நடராஜன் தனது 18, 20-வது ஓவரை மிகவும் கட்டுக்கோப்பாக வீசி ஆர்சிபி அணியை கட்டுக்குள் வைத்தார். 4 ஓவர்கள் வீசிய நடராஜன் 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற வகையில் சந்தீப்சர்மா, ரஷித் கான், நதீம் ஆகியோர் ஆர்சிபி பேட்ஸ்மேன்களை திணறவைக்கும் விதிதத்தில் பந்துவீசியதால்தான் ரன்ரேட்டை கட்டுப்படுத்த முடிந்தது.

அதிலும் ரஷித்கான் விக்கெட் எடுக்காவிட்டாலும் நடுப்பகுதியில் பந்துவீசி டிவில்லியர்ஸை மீண்டும் திணறவிட்டார். 4 ஓவர்கள் வீசிய ரஷித்கான் 11 டாட்பந்துகளை வீசினார், 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

தொடர்தோல்விகள்

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை கடந்த 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துவருகிறது. தோல்விக்கான காரணத்தை அறிந்து அதை திருத்தவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.அதை திருத்த முயன்றிருந்தால் நிச்சயம் வென்றிருக்க முடியும்.

131 ரன்களை வைத்துக் கொண்டு அதை வென்றுவிடலாம் என்று கோலி நினைத்தது வானில் ஏறி வைகுண்டம் போகும் கதைதான். இன்னும் கூடுதலாக 30 ரன்கள்அடித்திருந்தால், ஆட்டத்தை நெருக்கடியாகக் கொண்டு சென்றிருக்க முடியும். தொடரின் தொடக்கத்தில் பெற்ற வெற்றிகளை ஆர்சிபி அணியால் தொடர்ந்து தக்கவைக்கத் தெரியவில்லை.

பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவருமே நல்ல ரிதத்தில் இருந்தார்கள். அடுத்தடுத்து தோல்விகள் வந்தபோது அனைவரின் நம்பிக்கையுமே குலைந்துவிட்டது. இழந்த நம்பிக்கை மீட்க ஒரு வெற்றிகிடைத்திருந்தாலும் உயிர்ப்பெற்றிருக்கும், ஆனால் ஆர்சிபி அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்து வெளியேறியது.

டிவில்லியர்ஸ் மீது சுமை

இந்த தொடர் முழுவதும் விராட் கோலியின் பேட்டிங் எடுபடவில்லை. அதிலும் தொடக்க வீரராக இந்த போட்டியில் களமிறங்கி ஏமாற்றத்துடன் கோலி வெளியேறினார்.

நீண்டகாலமாக டிவில்லியர்ஸ் ஆர்சிபி அணிக்குள் இருந்தும் எந்தவிதமான கோப்பையை பெற்றுதரமுடியவில்லை. அடுத்த ஆண்டு வேறு அணிக்குச் சென்றால் அவரின் முழுத் திறனையும் பயன்படுத்த முடியும். இந்த தொடரின் பெரும்பாலான ஆட்டங்களின் வெற்றிகளையும், நெருக்கடிகளையும் டிவில்லியர்ஸ் எனும் ஒற்றை வீரர் மட்டுமே சுமந்தார் என்பதை மறுக்க முடியாது.

இந்த ஆட்டத்தில் கோலி 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி நெருக்கடிதான் சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுக்க முடிந்ததேத் தவிர வெற்றி பெற முடியவில்லை. ஒருகட்டத்துக்கு மேல், ஆர்சிபியின் முயற்சிகள், போரட்டம் அனைத்தும் ஹோல்டர், வில்லியம்ஸனிடம் தோற்றுபோயின.

விக்கெட் சரிவு

132 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. கோஸாமி, வார்னர் ஆட்டத்தைத் தொடங்கினர். சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே கோஸாமி டக்அவுட்டில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மணிஷ்பாண்டே, வார்னருடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அவ்வப்போது அதிரடியான சில ஷாட்களை ஆடி ரன்ரேட்டை உயர்த்தினர்.

சிராஜ் வீசிய 6-வது ஓவரில் வார்னருக்கு(17) சர்ச்சைக்குரிய கேட்ச்பிடிக்கப்பட்டு 3-வது நடுவர் அவுட் வழங்கினார். பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்தது சன்ரைசர்ஸ் அணி. 3-வது விக்கெட்டுக்குவந்த வில்லியம்ஸன், பாண்டேவுடன் சேர்ந்தார்.

ஹோல்டர், வில்லியம்ஸன் ஜோடி

நிதானமாக ஆடிய பாண்டே 24 ரன்னில் ஜம்ப்பா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தவந்த பிரியம் கர்க் 7 ரன்னில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு ஹோல்டர் வந்து வில்லியம்ஸனுடன் இணைந்தார். இருவரும் கூட்டணி சேரும்போது அணியின் வெற்றிக்கு 10 ரன்ரேட் தேவைப்பட்டது. கடைசி 8ஓவர்களில் வெற்றிக்கு 64 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் தொடக்ததில் நிதானமாக ஆடி ஒரு ரன், 2 ரன்களாகச் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர்.

கடைசி 5 ஓவர்களில் 45 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. வில்லியம்ஸன், ஹோல்டர் திடீரென அதிரடியாக ஆடி பவுண்டரி, சி்க்ஸர்கள் அடித்து பதற்றத்தைக் குறைத்தனர். அதிலும் வில்லியம்ஸன் டாட் பந்துகளை விடாமல் ரன்களைச் சேர்த்துக்கொண்டே இருந்ததால், ஆர்சிபி அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.

2 பவுண்டரி

ஷைனி வீசிய கடைசி ஓவரின் முதல்பந்தில் வில்லியம்ஸன் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ஹோல்டரிடம் கொடுத்தார். 2-பந்தை டாட்பந்தாக விட்ட ஹோல்டர், 3-வது பந்தில் லாங் ஆப் திசையில் பவுண்டரியும், 4-வது பந்தில் ேதர்ட்மேன் திசையில் பவுண்டரியும் அடித்து பதற்றமில்லாமல் வெற்றித் தேடித்தனர். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தனர்.

ஹோலட்ர் 24 ரன்னிலும், வில்லியம்ஸன் 50 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்து சன்ரைசர்ஸ் அணி வென்றது.

ஆர்சிபி தரப்பில் சிராஜ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கோலி, படிக்கல் ஏமாற்றம்

முன்னதாக டாஸ்வென்ற வார்னர் முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார். கோலி, படிக்கல் ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்க வரிசை கோலிக்கு ஒத்துவரவில்லை. ஹோல்டர் வீசிய முதல் ஓவரில் கோலி 6 ரன்னில் விக்கெட் கீப்பர் கோஸாமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஹோல்டர் வீசிய 4-வது ஓவரில் படிக்கல் ஒரு ரன்னில் கார்க்கிடம் கேட்ச் கொடுத்த வெளியேறினார். பவர்ப்ளே முடிவதற்குள் 15 ரன்களுக்குள் 2 விக்ெகட்டுகளை ஆர்சிபி அணி இழந்து தடுமாறியது.
3-வது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச், டிவில்லியர்ஸ் கூட்டணி சேர்ந்தனர்.

டிவில்லியர்ஸ் போராட்டம்

இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பின்ஞ்ச் 32 ரன்னில் நதீம் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த மொயின் அலி(0) ரன்அவுட் ஆகி வெளியேறினார். துபே(8), சுந்தர்(5) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

ஒற்றை ஆளாகப் போராடிய டிவில்லியர்ஸ் 56 ரன்கள் சேர்த்து நடராஜன் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ஷைனி 9 ரன்னிலும், சிராஜ் 10 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 56 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆர்சிபி அணி கடைசி 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்தது ஆர்சிபி அணி. சன்ரைசர்ஸ் தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், நடராஜன் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x