

ஐபிஎல் 2020-ன் முதல் பிளே ஆஃப் சுற்றில் டெல்லி அணியை அடித்து நொறுக்கிய மும்பை அணி இறுதிப் போட்டிக்கு அதிரடி முன்னேற்றம் கண்டது.
இதில் பேட்டிஙில் டி காக், எவர் கிரீன் சூரியகுமார், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா பின்னி எடுக்க கடைசி 6 ஓவர்களில் ரபாடா, நார்ட்யேவை புரட்டி எடுத்த மும்பை இந்தியன்ஸ் 200 ரன்களை எட்டியது.
தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியை பும்ரா, போல்ட் கூட்டணி பவர் ப்ளேயிலேயே காலி செய்து விட்டது, முதல் ஓவரில் போல்ட், ஷா, ரஹானேவை டக் அவுட் ஆக்க, பும்ரா வந்து ஷிகர் தவணுக்கு ஒரு பாதம் பெயர்க்கும் யார்க்கரை வீச, முன்னாள் மே.இ.தீவுகள் அதி உயர ஜொயெல் கார்னர் வீசும் யார்க்க போல் நேராக ஸ்டம்ப் அடிப்பாகத்தைத் தாக்க தவண் பேசாமல் வேடிக்கையே பார்க்க முடிந்தது.
இதோடு ஷ்ரேயஸ் அய்யரையும் வெளியேற்றிய பும்ரா, நன்றாக ஆடிய ஸ்டாய்னிஸையும் இன்ஸ்விங்கரில் கிளீன் பவுல்டு செய்து 4 ஓவர் 14 ரன்கள் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இதனையடுத்து அவர் கூறியதாவது:
நான் விக்கெட் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை, தொடரை வெல்ல வேண்டும். நான் விக்கெட்டுகளுக்காகப் பார்ப்பதில்லை, எனக்கு ஒரு ரோல் கொடுக்கப்பட்டுள்ளது, அதை திறம்படச் செய்ய வேண்டும். ஒவ்வொரு பந்தாகவே திட்டமிடுவேன்.
ஷிகர் தவணுக்கு வீசிய யார்க்கர் முக்கியமானது, அவரை யார்க்கரில் காலி செய்வது என்பதை முன் கூட்டியே திட்டமிட்டேன். ஆனால் துல்லியமாக அந்த யார்க்கர் விழுந்தது.
பனிப்பொழிவு ஏற்படுவதற்குள் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் அவசியத்தை உணர்ந்து ஆக்ரோஷமாக வீசினோம். இப்போதுதான் முதன் முதலாக ட்ரெண்ட் போல்ட்டுடன் வீசினேன்.
எங்களிடையே நல்ல உரையாடல் இருந்தது. அவர் திறமை மிக்க வீரர், அவருடன் களவியூகத்தை ஆலோசித்தேன். பல்வேறு விதங்களில் வீசுவது பற்றி இருவரும் ஆலோசித்தோம். பலதரப்பட்ட சூழ்நிலைகளில் வீசுவது எப்படி என்பதையும் விவாதித்தோம். விருதுகள் எனக்கு பெரிதல்ல.
இவ்வாறு கூறினார் பும்ரா.