Published : 06 Nov 2020 08:29 AM
Last Updated : 06 Nov 2020 08:29 AM

'தாதா' மும்பைக்கு முன்னால் 'சோதா'வான டெல்லி: இஷான், பாண்டியா, பும்ரா, ‘தண்டர் போல்ட்’ அபாரம்: இறுதியில் மும்பை இந்தியன்ஸ்

துபாயில் நடந்த, ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட, ஐபிஎல் 2020 முதல் பிளே ஆப் போட்டி முற்றிலும் ஒருதலைப்பட்ச ஆதிக்கமாக, டெல்லி அணி இன்னொரு வாய்ப்புக்காக காத்திருக்க, மும்பை இந்தியன்ஸ் அணி ஆதிக்க வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற அய்யர், பனிப்பொழிவை முன்னிட்டு முதலில் மும்பையை பேட் செய்ய அழைத்து பெருந்தவறு இழைத்தார். பவர் பேட்டிங் வரிசை யானை போல் டெல்லி மீது ஏறிக்குதித்து மிதித்து விளையாடி விட்டுப் போய்விட்டது. கடைசி 6 ஓவர்களில் 92 ரன்கள் என்பது சாதாரணமல்ல, கண்மண் தெரியாத அதிரடி அது.

முதலில் பேட் செய்த மும்பை கடைசியில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா காட்டடியில் 200/5 என்ற மிகப்பெரிய எண்ணிக்கையை எட்டியது. அஸ்வின் அட்டகாசமாக வீசி ரோஹித் சர்மா (0), டி காக் (40), பொலார்ட் (0) விக்கெட்டுகளை வீழ்த்தி நான் ஏன் ஒருநாள், டி20 இந்திய அணிகளில் இல்லை என்ற கேள்வியை கோலி மற்றும் ரவிசாஸ்திரி அண்ட் கோவுக்க்வுக்கு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி ‘தண்டர்’ போல்ட் மற்றும் பூம்பூம் பும்ரா பந்து வீச்சில் பவர் ப்ளேயிலேயே தோல்வியை உறுதி செய்தது. டக் ஃபார் 3, 20/4 பிறகு 41/5. பிறகு சொல்ல என்ன இருக்கிறது? முற்று முழுதான சரண். டோட்டல் சரெண்டர்.

பவர் மும்பையின் அதிரடி ஹிட்டிங்: அஸ்வின் எனும் பிரமாதன்

டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஒவரிலேயே குவிண்டன் டி காக் மூன்று அதிரடி பவுண்டரிகளை விளாசினார். ஆனால் அடுத்த ஓவரை அஸ்வின் வீச காற்றில் அற்புதமாக உள்செலுத்தப்பட்ட பந்து ரோஹித்தை தவறான லைனில் ஆட வைத்தது, ஆஃப் பிரேக்கில் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆகி வெளியேறினார், பிளம்ப் எல்.பி. இந்தத் தொடரில் பல பெரிய வீரர்களை, இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களான கோலி, ரோஹித்தை அனாயசமாக வீழ்த்தியிருக்கிறார் அஸ்வின். ஆனாலும் ஒருநாள், டி20 இந்திய அணிகளில் அவர் கால்வாதியான பவுலர்.. இது என்ன லாஜிக்?

ஆனால் ரோஹித் சர்மாவின் இழப்பை டெல்லி அணி பயன்படுத்தாத வண்ணம் ‘எவர் கிரீன்’ சூரிய குமார் யாதவ், குவிண்டன் டி காக் ஸ்கோரிங் ரேட்டை உயர்த்தினர். அஸ்வினையும் ஒரு கவர் ட்ரைவ் பவுண்டரி அடித்தார் டி காக். நார்ட்யே பவுலிங்கில் ஒரு ஷார்ட் ஆர்ம் புல் பவுண்டரி அடித்த சூரிய குமார் யாதவ் அஸ்வினை அருமையாக லாங் ஆஃப் மேல் ஒரு சிக்ஸ் தூக்கினார்.

இருவரும் களவியூகத்துக்கு பிரமாதமான சவால்களை அளித்து பவர் ப்ளேயில் 63/1 என்று கொண்டு நிறுத்தினர். குவிண்டன் டி காக் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து அபாயகரமாக இருந்த நிலையில் ஆபத்பாந்தவன் அஸ்வின் வந்தார். 8வது ஓவரில் இறங்கி வந்து லேசாக லெக் திசையில் ஒதுங்கி ஆஃப் திசையில் தூக்கப்பார்த்தார், ஆனால் அஸ்வின் பந்தை மெதுவாக வீச ஷாட் சரியாக சிக்காமல் லாங் ஆஃபில் கேட்ச் ஆனது. சூரியகுமார் யாதவ், டி காக் இணைந்து 6 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்தனர், இதில் பெரும்பங்கு டி காக் உடையதே.

7.4 ஓவர்களில் 78/2 என்று இருந்த மும்பை இந்தியன்ஸை அடுத்த 4 ஒவர்களுக்கு டெல்லி கட்டிப்போட்டது. 11.5 ஓவர்களில் 100 ரன்கள் என்றுதான் இருந்தது. மீண்டும் அற்புதமாக ஆடிய சூரிய குமார் யாதவ் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்து நார்ட்யேவின் எகிறு பந்துக்கு டாப் எட்ஜில் லாங் லெக்கில் கேட்ச் ஆகி வெளியேறினார். 12 ஓவர்களில் 100/3 என்று இருந்த போது நார்ட்யே 2 ஓவர்களில் 13 ரன் 1 விக்கெட், ரபாடா 2 ஓவர் 10 ரன் ஒரு விக்கெட்.

அதிரடி பவர் ஹிட்டிங் பொலார்டை அஸ்வின் அற்புதமான கேரம் பந்தில் டக்கில் வெளியேற்ற மும்பை இந்தியன்ஸ் 101/4 என்று இருந்தது. 13வது ஓவரில் 3 ரன்களுடன் அஸ்வின் பொலார்டை வீழ்த்தி 4 ஓவர் 29 ரன் 3 விக்கெட் என்று தன் அபாரப் பந்து வீச்சை நிறைவு செய்தார்.

14வது ஒவரில் டேனியல் சாம்ஸ் 5 ரன்களையே விட்டுக் கொடுக்க ஸ்கோர் 108 ரன்கள்தான். அடுத்த 6 ஓவர்களில் அதிகபட்சம் 60 ரன்கள் அல்லது 66 ரன்கள் என்று வைத்தால் கூட ஸ்கோர் 174 பக்கம்தான் வந்திருக்க வேண்டும்.

ஆனால் அப்போது இஷான் இஷன் 10 ரன்களுடனும் குருணால் பாண்டியா 4 ரன்களுடனும் இருந்தனர். 15வது ஓவரை ரபாடா வீச, இஷான் கிஷன் ஒரு பவுண்டரியையும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை 2வது அடுக்குக்கு பெரிய சிக்சரையும் விளாச 14 ரன்கள் அந்த ஓவரில் விளாசப்பட்டது. 16வது ஓவரில் நார்ட்யேவின் பவுன்சரை குருணால் லாங் லெக்கில் சிக்ஸ் தூக்கினார். முன்னதாக இஷான் கிஷன் ஸ்கூப் ஷாட்டில் ஒரு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 18 ரன்கள். 17வது ஓவரை நல்ல முயற்சியாக ஸ்டாய்னிஸிடம் கொடுத்தார் அய்யர், அவர் வந்தவுடனேயே குருணால் பாண்டியாவை (13) வீழ்த்தினார், 17 வது ஓவரில் ஸ்டாய்னிஸ் 5 ரன்களையே விட்டுக் கொடுக்க ஸ்கோர் 145/5 என்றுதான் இருந்தது.

18-வது ஓவரை தவறாக சாம்ஸிடம் கொடுத்தார் அய்யர், இதில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸ், இஷான் கிஷன் ஒரு சிக்ஸ். ஒன்று புல்டாஸ் இன்னொன்று ஸ்லோ பந்து. இந்த ஓவரில் 17 ரன்கள். 19வது ஓவரில் ரபாடா வந்தார். யார்க்கரை ஒரு இஞ்ச்சில் தவற விட ஹர்திக் லாங் ஆனில் ஒரே தூக்குத் தூக்கினார் சிக்ஸ், ஆனால் அபாரமான ஷாட் இது. அடுத்த பந்தை ஸ்லோவாக ரபாடா வீச ஆனால் பாண்டியாவின் பவருக்கு இந்தமுறை மிட்விக்கெட்டில் சிக்ஸ். ரபாடா ஓவர் 18 ரன்கள். 20-வது ஓவரை நார்ட்யே வீச பாண்டியா 2 சிக்சர்களை விளாச, 194 ரன்கள் என்ற நிலையில் கடைசி பந்தை இஷான் கிஷன் மிகப்பிரமாதமாக எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸ் அடிக்க ஸ்கோர் 200.

இஷான் கிஷன் 30 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 55 ரன்கள், ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்கள்.

2 ஒவர்களில் முறையே 10, 13 ரன்களில் இருந்த ரபாடா, நோர்ட்யே கடைசி விளாசலில் 4 ஓவர் 42 என்றும் 4 ஓவர் 50 ரன் என்றும் ஆயினர். அக்சர் படேல் 3 ஓவர் 27 ரன்கள் 4வது ஓவர் ஏன் கொடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை, ஸ்டாய்னிஸ் ஒரு ஓவர் 5 ரன்கள் ஏன் அவரை கடைசியில் பயன்படுத்தவில்லை என்பதும் புதிரா அல்லது உஷ் கண்டுக்காதீங்கவா என்று புரியவில்லை.

பவர் ப்ளேயிலேயே காலி செய்த பும்ரா, போல்ட் கூட்டணி:

வெற்றி பெற 201 ரன்கள் தேவை என்ற நிலையில் இறங்கிய டெல்லி அணி ரன் எடுக்காமலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. பிரிதிவ் ஷாவுக்கு அருமையான ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரின் குறுக்கே செல்லும் பந்தை போல்ட் வீச பேசாமல் எட்ஜ் செய்து வெளியேறினார். இதே ஓவரில் இருமுறை ரஹானேவுக்கு குறுக்காக செல்லுமாறு வீசி விட்டு ஒரு பந்தை உள்ளே கொண்டு வர பிளம்ப் எல்.பி. ஆனார். 2 விக்கெட் மெய்டன் ஓவர் ஆனது.

பூம் பூம் பும்ரா வந்தார். ஷிகர் தவணின் பாதங்களைப் பெயர்க்கும் கூர்மையான யார்க்கர், பவுல்டு ஆவதைத் தவிர வேறு வழியில்லை. ஷ்ரேயஸ் அய்யர் போல்ட்டை ஒரு லாங் ஆன் பவுண்டரியும் ஒதுங்கிக் கொண்டு கவரில் ஒரு பவுண்டரியும் அடித்து 3 பவுண்டரிகளுடன் 12 ரன்களில் இருந்த போது பும்ரா வீசிய வைடு லெந்த் பந்தை நேராக கவரில் ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரிஷப் பந்த் ஒரு தண்டம் என்பதற்கேற்ப 9 பந்துகளில் 3 ரன்களுடன் மோசமான ஷாட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார். 8 ஓவர்களில் 41/5 என்று முடிந்து விட்டது டெல்லி.

ஸ்டாய்னிஸ் ஒரு அருமையான பேக்ஃபுட் வீரர், வேகப்பந்து வீச்சை நன்றாக ஆடுகிறார். அவர் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்து பும்ராவின் இன்ஸ்விங்கரில் மிடில் ஸ்டம்ப் எகிற ஆட்டமிழந்தார். அக்சர் படேல் பாவம் வஞ்சனையில்லாமல் ஆடினார். 33 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுத்து பொலார்டிடம் வீழ்ந்தார். 143/8 என்று சோதாவாகச் சாய்ந்தது டெல்லி.

4 ஒவர் 1 மெய்டன் 14 ரன்கள் 4 விக்கெட் வீழ்த்திய பூம் பூம் பும்ரா ஆட்ட நாயகன். டெல்லி அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x