

துபாயில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 378 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 75.2 ஓவரில் 242 ரன்களுக்கு சுருண்டது.
ஜோ ரூட் 88, பேர்ஸ்டோவ் 46, ஸ்டோக்ஸ் 4, பட்லர் 0, ரஷித் 0, வுட் 1, ஆண்டர்சன் 4 ரன்களில் வெளியேறினர். பாக். தரப்பில் வகாப் ரியாஸ், யாசிர் ஷா ஆகியோர் தலா 4, இம்ரன்கான் 2 விக்கெட் வீழ்த்தினர்.
136 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய பாக். அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. மிஸ்பா 71, யுனுஸ்கான் 87 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நேற்றைய ஆட்டத்தில் 47 ரன்கள் எடுத்தபோது யுனுஸ்கான் டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
இந்நிலையில் நேற்று காலை 36 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்து 242 ரன்களுக்குச் சுருண்டதற்குக் காரணம், இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் மற்றும் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா ஆகியோர்களே.
ஜோ ரூட் 76 ரன்களில் களமிறங்கி முன்னேறிச் சென்றிருக்க வேண்டும், ஆனால் யாசிர் ஷா வீசிய 2 புல்டாஸ் பந்துகளில் சவுகரியம் கண்ட ஜோ ரூட், பிறகு வஹாப் ரியாஸ் வீசிய ஃபுல் லெந்த் பந்தை எட்ஜ் செய்து கேட்ச் கொடுத்து 88 ரன்களில் வெளியேறி சரிவைத் தொடங்கி வைத்தார்.
இது குறித்து ஜோ ரூட் கூறும்போது, “பாகிஸ்தான் அபாரமாக விளையாடினர். எங்களை சீரான முறையில் கடும் நெருக்கடிக்குத் தள்ளினர். வஹாப் ரியாஸ் உள்ளிட்டோர் எங்களால் கையாள முடியாத வேகத்தில் பந்துகளை ரிவர்ஸ் ஸ்விங் செய்தனர்.
லெக்ஸ்பின்னர் யாசிர் ஷா நல்ல கட்டுப்பாட்டுடன் வீசினார். ஆனால் நேர்மையாகக் கூற வேண்டுமென்றால் எங்களது சில ஷாட்கள், அதாவது அவுட் ஆன ஷாட்கள் பற்றி நாங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலையில்தான் உள்ளது” என்றார்.