

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி தனது அதிரடியால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் வீரேந்திர சேவாக் (37). கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்து ஓரங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 20ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சேவாக் அறிவித்தார்.
ஜனவரி மாதம் நடைபெறும் எம்சிஎல் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்த ஓய்வு முடிவை சேவாக் அறிவித்தார். எனினும் சேவாக் ரஞ்சிகோப்பை போட்டிகளில் ஆடிவருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் முக்கிய பங்குவகித்த சேவாக்கை உரிய மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் (டிசம்பர் 7) சேவாக்கிற்கு பாராட்டு விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் பிரகாஷ் பன்சால் கூறுகையில், சேவாக்கிற்கு பாராட்டு விழா நடத்தவது தொடர்பாக பிசிசிஐ-யிடம் இருந்து முறைப்படியான எந்த தகவலும் வரவில்லை. எனினும் சேவாக்கை கவுரவிக்கவே பிசிசிஐ விரும்புகிறது.
பாராட்டு விழா நடத்துவது தொடர்பான தகவல் வந்ததும் அதற்கான பணிகளை சிறப்பாக செய்வோம். பெரேஷா கோட்லா மைதானத்தின் ஏதேனும் ஒரு நுழைவு வாசலுக்கு சேவாக் பெயரை வைக்கும் எண்ணம் உள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
அண்மையில் ஓய்வு பெற்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை, இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 5 வது ஒருநாள் போட்டியின் போது பிசிசிஐ கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.