

இருமுறை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ‘உதை’ வாங்கியிருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் தங்களை பிளே ஆஃப் சுற்றில் வீழ்த்தி விட முடியாது என்று சூளுரைக்கிறார் ஷிகர் தவண்.
இன்று துபாயில் விறுவிறுப்பான போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் மும்பைக்கும் இடையே நடைபெறுகிறது.
ரோஹித் சர்மா இருவாரங்களாக காயத்தினால் ஒதுங்கியிருந்ததால் அவருக்கு பேட்டிங் டச் இல்லை என்கிறார் ஷிகர் தவண்.
“ரோஹித் ஒரு அபார வீரர், ஆனால் அவர் அதிகப் போட்டிகளில் இந்த முறை ஆடவில்லை, அதனால் அவர் பேட்டிங் டச்சில் இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. நிச்சயம் அவரது இந்த டச் இன்மையை நாங்கள் எங்களுக்குச் சாதகமாகத் திருப்புவோம்.
அவருக்கு என் நல் வாழ்த்துக்கள், ஆனால் எதிரணி வீரராக அவரது பேட்டிங் பார்ம் இன்மையை நிச்சயம் பயன்படுத்துவோம்.
நல்ல பார்முக்கு வந்த பிறகே அதை ஆஸ்திரேலியா தொடரிலும் தக்கவைக்கவே விரும்புவோம், நான் ஆஸ்திரேலியா தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலியா அற்புதமான ஒரு இடம். நல்ல பிட்ச்கள், அவர்கள்பவுலிங்கை நான் மகிழ்வுடன் விளையாடுவேன்.
ஆஸி. தொடர் ஒரு சிறப்பு வாய்ந்த தொடர், இந்திய அணி நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாடுகிறது. என்னுடைய தரம் என்னவென்பதைக் காட்டுவேன். ” என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி 5 ஒருநாள் ஆட்டங்களில் தவண் 2 அரைசதங்கள் இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார். உண்மைதான் ஆஸி.பவுலிங்கை அவர் மகிழ்ச்சியுடன் தான் ஆடுகிறார்.