Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

ஐபிஎல் டி20 இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?- மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் இன்று இரவு துபாயில் நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

நான்கு முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி, லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்திருந்தது. அதேவேளையில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியானது 8 வெற்றி, 6 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை கைப்பற்றியிருந்தது.

இந்த சீசனில் டெல்லி அணியானது லீக் சுற்றில் இரு முறை மும்பையிடம் தோல்வி கண்டிருந்தது. ஒரு முறை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்த டெல்லி அணி, அடுத்த முறை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது. அந்த ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ரா, டிரெண்ட் போல்ட் ஆகியோரது பந்து வீச்சில் டெல்லி அணி 110 ரன்களுக்கு சுருண்டிருந்தது.

தற்போது 3-வது முறையாக இரு அணிகளும் இந்த சீசனில் நேருக்கு நேர் மோத உள்ளன. ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 26 முறை மோதி உள்ளன. இதில் மும்பை 14 ஆட்டங்களிலும், டெல்லி 12 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன. எனினும் டெல்லி அணி 12 வருட ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் டெல்லி அணியானது எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத்தை தோற்கடித்திருந்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற 2-வது தகுதி ஆட்டத்தை டெல்லி அணியால் வெற்றிகரமாக கடக்க முடியாமல் போனது.

மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சற்று சர்ச்சையானது. இந்த ஆட்டத்தில் பும்ரா, டிரெண்ட் போல்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் ஒட்டுமொத்த அணியும் முனைப்புடன் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி மீண்டும் ஒரு முறை உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும். பேட்டிங்கில் குயிண்டன் டி காக், இஷான் கிஷன், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இவர்கள் 3 பேரும் இந்த சீசனில் முறையே 443, 424, 410 ரன்கள் சேர்த்துள்ளனர். இவர்களுடன் உடற்தகுதி பிரச்சினையில் சிக்கியுள்ள கேப்டன் ரோஹித் சர்மாவும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கும். இறுதிகட்ட ஓவர்களில் மட்டையை விளாச ஹர்திக் பாண்டியா, கெய்ரன் பொலார்டு ஆகியோர் ஆயத்தமாக உள்ளனர்.

பந்து வீச்சை பொறுத்த வரையில் 23 விக்கெட்களை வீழ்த்தி உள்ள ஜஸ்பிரீத் பும்ரா, 20 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள டிரெண்ட் போல்ட் ஆகியோர் ஆட்டத்தின் எந்த பகுதியிலும் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியவர்களாக திகழ்கின்றனர். சுழற்பந்து வீச்சில் ராகுல் சாஹர், கிருணல் பாண்டியா லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இவர்களுடன் நேதன் கவுல்டர் நைல், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

டெல்லி அணி தொடக்க போட்டிகளில் அசுர பலத்துடன் விளையாடிய நிலையில் பிற்பகுதியில் தேக்கம் அடைந்தது. 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த நிலையில் லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி இழந்த நம்பிக்கையை மீட்டெடுத்தது. பேட்டிங்கில் கடந்த சில ஆட்டங்களாக தடுமாறி வரும் தொடக்க வீரரான பிரித்வி ஷாவுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம்தான்.

அவரது இடத்தில் அஜிங்க்ய ரஹானேவை களமிறக்குவது குறித்து அணி நிர்வாகம் ஆலோசிக்கக் கூடும். ரஹானே கடைசி லீக் ஆட்டத்தில் 3-வது வீரராக களமிறங்கி 60 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு சேர்த்திருந்தார். 2 சதங்கள், 3 அரை சதங்களுடன் 525 ரன்கள் வேட்டையாடி உள்ள ஷிகர் தவண், 421 ரன்கள் சேர்த்துள்ள ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக் கூடும். மார்கஸ் ஸ்டாயினிஸ், ரிஷப் பந்த், ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை தரக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்த வரையில் காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே கூட்டணி இந்த சீசன் முழுவதும் பிரமாதமாக பந்து வீசி வருகின்றனர். அதிலும் ராபாடா இந்த சீசனில் 25 விக்கெட்களை வேட்டையாடி அதிக விக்கெட்கள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேவேளையில் அன்ரிச் 19 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இந்த கூட்டணி மும்பை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரக்கூடும். இவர்களுடன் மார்கஸ் ஸ்டாயினிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோரும் பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 10-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். மாறாக தோல்வி அடையும் அணிக்கு 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். 8-ம் தேதி நடைபெறும் இந்த ஆட்டத்தில், எலிமினேட்டர் ஆட்டத்தில் (பெங்களூரு –ஹைதராபாத்) வெற்றி பெறும் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

இன்றைய ஆட்டம்

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x