

தன்னுடைய பின் தொடை தசை நார் காயம் முற்றிலும் குணம்டைந்து விட்டது என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ரோஹித் நேற்று 2 வாரகால ஓய்வுக்குப் பிறகு சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஆடி 4 ரன்களில் வெளியேறினார். ரவிசாஸ்திரி அவசரம் வேண்டாம் என்று எச்சரித்தும், ஐபிஎல் முக்கியமா அல்லது தொடர்ந்து ஆடக்கூடிய இந்திய அணி கரியர் முக்கியமா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள் ரோஹித் என்று கங்குலி எச்சரித்தும் அவர் சொல்பேச்சு கேட்காமல் நேற்று இறங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் கூறியதாவது, “மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. இன்னும் சில போட்டிகளில் ஆடப்போகிறேன். ஆடித்தான் பார்ப்போம் என்ன ஆகிறது என்பதைப் பார்ப்போம். காயம் இப்போது குணமடைந்து விட்டது.” என்கிறார்.
இவரது காயத்தினால்தான் ஆஸ்திரேலியா தொடருக்கு முழுதும் அவர் தேர்வு செய்யப்படவில்லை, இந்நிலையில் அந்த முடிவை கேள்விக்குட்படுத்தும் விதமாக அவர் தனக்கு காயமில்லை என்று கூறி அனைவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி மருத்துவக் குழுவும், இந்திய அணியின் மருத்துவ அறிக்கையும் ரோஹித் சர்மா விளையாடினால் அது அவர் காயத்தை நிச்சயம் அதிகப்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
ஆனால் உடற்தகுதி பெற்று விட்டீர்களா என்ற கேள்விக்கு, “நான் உடற்தகுதியுடன் நன்றாக இருக்கிறேன்” என்கிறார் ரோஹித் சர்மா.
நேற்றைய தோல்வி குறித்து அவர் கூறும்போது, “இந்த சீசனில் எங்களது மோசமான ஆட்டம், ஒரு சில பரிசோதனைகளை அணித்தேர்வில் மேற்கொண்டோம், அது எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை.
பவர் ப்ளேயில் அவர்கள் நல்ல ஷாட்களை ஆடினர். இது வேடிக்கையான ஒரு வடிவம், நடந்ததை மறந்து விடுவதுதான் நல்லது. டெல்லி நல்ல அணி எனவே பிளே ஆஃப் சவாலாக இருக்கும்” என்றார் ரோஹித் சர்மா