Published : 04 Nov 2020 07:52 AM
Last Updated : 04 Nov 2020 07:52 AM

முனைப்பற்ற ஆட்டம்; விட்டுக்கொடுத்ததா மும்பை? மிகப்பெரிய வெற்றியுடன் சன் ரைசர்ஸ் தகுதி: பரிதாப கொல்கத்தா வெளியேற்றம்

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ட்ரீம் லெவன் ஐபிஎல் 2020-ன் 56வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 149/8 என்று முடிய, இலக்கை விரட்டிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 17.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

துரதிர்ஷ்டம் என்னவெனில் சன் ரைசர்ஸை விட வலுவான அணிச்சேர்க்கைக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் நிகர ரன் விகிதம் மைனஸில் இருப்பதால் பரிதாபமாக வெளியேறியது. இந்தப் போட்டியில் மும்பை வென்றிருந்தால் சன் ரைசர்ஸ் வெளியேறியிருக்கும். சன் ரைசர்ஸ், ஆர்சிபி, கொல்கத்தா 3 அணிகளுமே 14 போட்டிகள் 7 வெற்றி 7 தோல்வி என சமநிலைதான் வகிக்கின்றன, ஆனால் நெட் ரன் ரேட் கொல்கத்தாவுக்கு எமனாகி விட்டது.

டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி திட்டமிட்டபடி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் பலரது எச்சரிக்கைகளையும் மீறி காயமடைந்த ரோஹித் சர்மா ஆடியது புரியாத புதிர். வெற்றி பார்முலாவான இஷான் கிஷன், டி காக் ஜோடியை விடுத்து காயமடைந்த ரோஹித் இறங்கியதன் அர்த்தம் என்னவென்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது. அதோடு இல்லாமல், பிளே ஆஃப் தகுதி பெற்றிருந்தாலும் இது போன்ற தொடர்களில் வலுவான அணியை களமிறக்கி வாய்ப்புக்காக எதிரணி போராடி வென்று தகுதி பெறச் செய்வதுதான் உண்மையான கிரிக்கெட். ஆனால் ஒரே சமயத்தில் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், பிக் ஹிட்டிங் ஹர்திக் பாண்டியாவை உட்கார வைத்து சன் ரைசர்ஸுக்கு சுலபமாக்கியதோ மும்பை இந்தியன்ஸ் என்ற ஐயம் எழுகிறது.

சந்தீப் சர்மா பவர் ப்ளேயில் பிரமாதமாக வீசினார், இவர் 4 ஒவர்களில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஏற்கெனவே மெதுவாக வீசும் சந்தீப் சர்மா, ரோஹித் இறங்கி வருவதைப் பார்த்து இன்னும் மெதுவாக்கி விரல்கள் மூலம் பந்தை ரிலீஸ் செய்ய மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து ஃபிட் மேன் இல்லாத ஹிட்மேன் 4 ரன்களில் வெளியேறினார்.

ஆனால் குவிண்டன் டி காக், சந்தீப் சர்மாவை வெளுத்துக் கட்டினார் ஒரே ஓவரில் பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை நொறுக்கினார். ஆனால் அதே ஓவரில் சந்தீப் சர்மாவின் ஃபுல்டாஸ் பந்தை வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டு டி காக் 25 ரன்களில் வெளியேறினார்.

ஆனால் அடக்க முடியாத சூரிய குமார் யாதவ் மட்டும் சிறப்பாக ஆடினார், ரஷீத் கானின் களவியூகம் கைமந்திரத்தை சூரியகுமார் யாதவ் முறியடித்தார். இஷான் கிஷனும், சூரிய குமார் யாதவ்வும் இணைந்து ஸ்கோரை 81 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

அப்போது சன் ரைசர்ஸின் இடது கை ஸ்பின்னர் ஷாபாஸ் நதீம் வந்து சூரிய குமார் யாதவ்வை (36) அபாரமான மிக மெதுவான ஒரு பந்தில் ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்தினார். இதே ஓவரின் 4வது பந்தில் நதீம் மீண்டும் மிக மெதுவாக ஒரு பந்தை வீசினார் லீடிங் எட்ஜில் குருணால் பாண்டியாவை டக் அவுட் செய்தார். மும்பை இந்தியன்ஸ் 81/4 என்று 12வது ஓவரில் இருந்தது. சவுரவ் திவாரி (1), இஷான் கிஷன் (33) விக்கெட்டுகளை இழந்தது. சவுரவ் திவாரி ரஷீத் கானிடம் வெளியேற, இஷான் கிஷனை பவுல்டு செய்தார், இதுவும் பெரிய பந்தெல்லாம் இல்லை. வைடு பந்தை வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டார், இதோடு 17வது ஓவரில் 115/6 என்று இருந்தது மும்பை.

ஆனால் எப்போதும் அடங்காத கெய்ரன் பொலார்ட் இறங்கி 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 25 பந்துகளில் 41 ரன்கள் விளாசியதோடு ஐபிஎல் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை எடுத்து சுயசாதனை புரிந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 149/8 என்ற இலக்கை எட்டியது. ஹைதராபாத் அணியில் சந்தீப் சர்மா 3 விக்கெட்டுகளையும் ஜேசன் ஹோல்டர், நதீம் தலா 2 விக்கெட்டுகளையும் ரஷீத் கான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியாத முனைப்பற்ற மும்பை பவுலிங்.. சஹா, வார்னர் விளாசல்:

இத்தனைப் போட்டிகளாக எங்கிருந்தார் என்று தெரியாத தவால் குல்கர்னி, ஓபனிங் போடாத கூல்டர் நைல் பந்து வீச்சைத் தொடக்க சஹா ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி விளாசித் தொடங்கினார். இதோடு மீண்டும் 2 பவுண்டரிகளை அடித்து பவர் ப்ளே தாதா என்பதைக் காட்டினார், மறுமுனையில் வார்னர் 4வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார்.

அடுத்த 2 ஓவர்களில் மேலும் 3 பவுண்டரிகளை இருவரும் அடிக்க ஸ்கோர் பவர் ப்ளேயில் 56/0 என்று எழுச்சித் தொடக்கம் கண்டது.

இவர்களை நிறுத்த ஆளில்லை, அடுத்த 4 ஓவர்களில் பவுண்டரிகள் வந்தவண்ணம் இருக்க மேலும் 33 ரன்களைக் குவித்தனர். 10 ஓவர்களில் 89/0 என்று ஆதிக்கம் செலுத்தியது ஹைதராபாத்.

12வது ஓவரில் சஹா, வார்னர் இருவரும் தங்கள் அரைசதத்தை எட்ட கூட்டணியும் நூறு ரன்களைக் கடந்து சென்றது. வார்னர் இந்த சீசனில் தனது 500வது ரன்னை எடுத்தார். வார்னர் 58 பந்துகளில் 10 பவுண்டரிகல் 1 சிக்சருடன் 85 ரன்கள் எடுக்க சஹா 45 பந்துகளில் 7 பவுண்டரிகல் 1 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து இருவரும் ஆட்டமிழக்காமல் 151/0 என்று வெற்றி பெறச் செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு இட்டுச் சென்றனர். ஆட்ட நாயகனாக இடது கை ஸ்பின்னர் ஷாபாஸ் நதீம் தேர்வு செய்யப்பட்டார்.

இன்னொரு முக்கியமான அணியும் தகுதி பெற வாய்ப்பிருக்கும் நிலையில் தான் தகுதி பெற்று விட்டோம் என்பதற்காக சொத்தையாக ஆடி கிரிக்கெட் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தைக் கெடுத்ததே மும்பை இந்தியன்ஸ் நேற்று செய்த காரியம்.

களத்தில் கொல்கத்தாவின் விதி இந்த ஆட்டத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கிய வீரர்களை உட்கார வைத்ததும், ரோஹித் சர்மா காயத்துடன் ஆடியதும் பும்ரா, ஹர்திக், போல்ட் உட்கார வைக்கப்பட்டதும் கடும் விமர்சனங்களுக்குரியவையே. ஒரு சவாலான ஆட்டத்தில் ஹைதராபாத் போராடி, கிங்ஸ் லெவன் போல் வெற்றி பெற்று பிளே ஆஃப் தகுதி பெற்றிருந்தால் அது உண்மையில் கொல்கத்தா வெளியேறியதற்கான ஒரு நியாயமாக இருக்க முடியும். ஆனால் ஒன்றுமேயில்லாமல் சொத்தையான ஒரு போட்டியில் முனைப்பற்ற ஆட்டம் ஒன்று பிளே ஆஃப் சுற்றுக்கான 4வது அணியைத் தீர்மானிப்பது ஐபிஎல் கிரிக்கெட் என்ற மிகப்பெரிய பிராண்டுக்கும் நல்லதல்ல, கிரிக்கெட் ஆட்டத்துக்கும் நல்லதல்ல என்றே எண்ணத் தோன்றுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x