Published : 02 Nov 2020 07:18 PM
Last Updated : 02 Nov 2020 07:18 PM

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் வாட்ஸன் ஓய்வு? சிஎஸ்கேவின் கடைசி வெற்றியுடன் கண்ணீருடன் விடை பெற்றதாகத் தகவல்

ஷேன் வாட்ஸன் : கோப்புப்படம்

அபு தாபி

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் ஆல்ரவுண்டருமான ஷேன் வாட்ஸன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக, சிஎஸ்கே அணி வீரர்களிடம் மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதுவரை ஷேன் வாட்ஸன் தரப்பில் அதிகாரபூர்வமாக எந்த விதமான அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

அபுதாபியில் நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதும் ஓய்வு அறையில் இந்த அறிவிப்பை கண்ணீர் மல்க ஷேன் வாட்ஸன் அறிவித்தார் என்று ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸி. வீரர் ஷேன் வாட்ஸன் ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2016-ம் ஆண்டு ஓய்வு அறிவித்துவிட்டார். கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியில் இடம் பெற்று வரும் வாட்ஸன் அந்த ஆண்டு கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார்.

2018-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து கோப்பையை வென்று கொடுத்தார். 2019-ம் ஆண்டில் மும்பை அணிக்கு எதிராக இறுதிப்போட்டி வரை சிஎஸ்கே அணி நகர வாட்ஸன் பங்களிப்பு முக்கியக் காரணமாக அமைந்தது.

2018-ம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்காக 555 ரன்களும், 2019-ல் 398 ரன்களும் வாட்ஸன் சேர்த்தார். ஆனால், 2020 ஆம் ஆண்டு சீஸன் சிஎஸ்கே அணிக்கே சோகமாக முடிந்த நிலையில் அதில் 11 இன்னிங்ஸில் 299 ரன்கள் மட்டுமே வாட்ஸனால் சேர்க்க முடிந்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐபிஎல் தொடரில் சிறந்த ஆல்ரவுண்டராக வாட்ஸன் வலம் வந்துள்ளார். இதுவரை 145 போட்டிகளில் 3,874 ரன்கள் சேர்த்துள்ள வாட்ஸன் பந்துவீச்சில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிஎஸ்கே அணிக்கு வருவதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகளில் விளையாடியுள்ளார். இதில் சிஎஸ்கே அணிக்காக மட்டும் 43 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஐபிஎல் தொடர் நாயகன் விருதையும் வாட்ஸன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணி வட்டாரங்கள் கூறுகையில், “பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்தவுடன் ஓய்வறைக்கு வந்த ஷேன் வாட்ஸன் அனைத்து வீரர்களிடமும், கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வுபெறப் போகிறேன் என்று உணர்ச்சிப் பெருக்குடன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் விளையாடிய காலம் எனக்கு மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது” என வாட்ஸன் தெரிவித்ததாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x