ஐஎஸ்எல்: புனேவுக்கு 3-வது வெற்றி

ஐஎஸ்எல்: புனேவுக்கு 3-வது வெற்றி
Updated on
1 min read

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் 9 புள்ளிகளைப் பெற்றுள்ள புனே அணி, கொல்கத்தாவை பின்னுக்குத்தள்ளி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

புனேவில் நடந்த இந்த ஆட்டத்தில் புனே 4-3-3 என்ற பார்மட்டிலும், கொல்கத்தா அணி 4-2-3-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் வலது புறத்தில் இருந்து கோல் கம்பத்தின் இடதுபுறத்தை நோக்கி பறந்து வந்தது பந்து.

அப்போது கொல்கத்தாவின் பின்கள வீரரை பின்னுக்குத்தள்ளி மின்னல் வேகத்தில் பாய்ந்த புனேவின் ஸ்டிரைக்கர் ஜாக்கிசந்த், மிக அற்புதமாக இடது காலால் அதிவேகமாக பந்தை உதைக்க அது கோலானது. அவருடைய ஷாட்டின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத கொல்கத்தா கோல் கீப்பர் கேலாடாய்ட் நிலைகுலைந்து போனார். ஜாக்கிசந்த் அடித்த இந்த கோல், இந்த சீசனின் அதிவேக கோலாகவும் அமைந்தது.

இதன்பிறகு தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய புனே அணி, கொல்கத்தாவுக்கு நெருக்கடி ஏற்படுத்த முயற்சித்தது. 7-வது நிமிடத்தில் கொல்கத்தா ஸ்டிரைக்கர் இயான் ஹியூம், பந்தை அற்புதமாக பெனால்டி பாக்ஸுக்குள் கடத்தினார். ஆனால் அதை பயன்படுத்தி கோலடிக்க அங்கு கொல்கத்தா வீரர்கள் யாரும் இல்லாதது ஏமாற்றமாக அமைந்தது. இதன்பிறகு கொல்கத்தா அணியும் தாக்குதல் ஆட்டத்தில் இறங்க, ஆட்டம் சூடுபிடித்தது.

27-வது நிமிடத்தில் புனே வீரர் சான்லியை கொல்கத்தா வீரர்கள் கீழே தள்ளினர். ஆனால் நடுவர் பெனால்டி கொடுக்காததால் அதன் பயிற்சியாளர் கடும் அதிருப்தியடைந்தார். பின்னர் 30-வது நிமிடத்தில் புனேவின் இரு கோல் வாய்ப்பை கொல்கத்தா பின்கள வீரர் அர்னாப் மான்டல் அற்புதமாக முறியடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் முடிவில் புனே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கொல்கத்தா கோலடிக்க தீவிரமாக போராடிய அதேவேளையில், புனே அணி தங்களுக்கு கிடைத்த சில நல்ல வாய்ப்புகளை கோட்டைவிட்டது. இரு அணிகளும் வீரர்களை மாற்றிப் பார்த்தும் பலன் கிடைக்காத நிலையில் புனே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இன்றைய ஆட்டம்

கேரளா-டெல்லி | இடம்: கொச்சி | நேரம்: இரவு 7 | நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜெயா மேக்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in