சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறேன் ரோஹித் சர்மா.. வேண்டாம் ரிஸ்க் வேண்டாம்: ரவி சாஸ்திரி எச்சரிக்கை

சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறேன் ரோஹித் சர்மா.. வேண்டாம் ரிஸ்க் வேண்டாம்: ரவி சாஸ்திரி எச்சரிக்கை
Updated on
1 min read

பின்தொடை தசைநார் பிரச்சினை காரணமாக ஹிட்மேன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா தொடருக்கும் தேர்வாகவில்லை, ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகக் கூறியதாவது:

மருத்துவக்குழுவே ரோஹித் சர்மாவின் உடல்தகுதியை தீர்மானிப்பவர்கள். அதில் நாங்கள் ஈடுபடுவதில்லை. தேர்வுக்குழுவினருக்கு ரோஹித் சர்மாவின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்தனர், அவர்கள் முடிவெடுத்தனர்.

எனக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை, தேர்வுக்குழுவில் நான் ஒரு அங்கமல்ல. எனக்கு மருத்துவ அறிக்கை மட்டுமே தெரியும், அதில் ரோஹித் சர்மா தொடர்ந்து ஆடினால் மீண்டும் அவர் படுகாயமடையவே அதிக வாய்ப்பு என்று எச்சரிகக்ப்பட்டுள்ளது. அதாவது ரோஹித் சர்மா ஜாக்கிரதையாக இல்லாவிடில் மீண்டும் அவர் காயமடைவார் அது அபாயகரமானதாக இருக்கும் என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது.

ஒரு வீரருக்கு காயமடைவதைப் போல் வெறுப்பூட்டுவது வேறெதுவும் கிடையாது. அறையிலிருந்து வெளியே வர வேண்டும், ஆடிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் நம் மனதுக்கு நன்றாகத் தெரியும் நாம் 100% உடல் ரீதியாக தகுதியுடையவரா இல்லையா என்று.

எனக்கு என்ன பயமாக இருக்கிறது என்றால், ஒரு கிரிக்கெட் வீரராக நானே இதை அனுபவத்திருக்கிறேன். என் கிரிக்கெட் வாழ்வு 1991ம் ஆண்டு முடிவுக்கு வந்தது, நான் ஆஸ்திரேலியா தொடருக்குச் சென்றேன், ஆனால் உண்மையில் நான் அந்தத் தொடருக்குச் சென்றிருக்க கூடாது.

நான் அப்போது ஆஸி. செல்லாமல் 3-4 மாதங்கள் ஓய்வு எடுத்திருந்தால் இன்னும் 5 ஆண்டுகள் இந்தியாவுக்காக ஆடியிருக்கலாம்.

எனவே அனுபவத்திலிருந்து கூறுகிறேன் ரோஹித், இதுவும் அப்படிப்பட்ட நிலைதான். நான் போவேன் என்றேன், டாக்டர்கள் வேண்டாம் என்றனர். நான் நல்ல பார்மில் இருந்தேன், அதனால் ஆட வேண்டியதுதான் என்று சென்றேன். கடைசியில் கரியர் முடிந்தது. ரோஹித் சர்மா நிலை என்னுடைய அப்போதைய நிலையை விட சீரியஸானது கிடையாது, இஷாந்த் சர்மாவுக்கும் இதேதான், என்றார் ரவிசாஸ்திரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in