Last Updated : 02 Nov, 2020 03:13 AM

 

Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM

விளையாட்டாய் சில கதைகள்: 3 ஓவர்களில் சதம் அடித்த பிராட்மேன்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 3 ஓவர்களில் 50 ரன்களைக் குவிக்கும் அணிகளையும், பேட்ஸ்மேன்களையும் இன்று நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் ஒரு பேட்ஸ்மேன் நினைத்தால் 3 ஓவர்களில் சதமே அடிக்க முடியும் என்பதை டான் பிராட்மேன் நிரூபித்த நாள் நவம்பர் 2, 1931.

கிரிக்கெட் விளையாட்டின் பிதாமகன் என்று எல்லோராலும் புகழப்படுபவர் டான் பிராட்மேன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட்ஸ்மேனான இவர், செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த வரிசையில் வெறும் மூன்றே ஓவர்களில் அடித்த இந்தச் சதமும் வருகிறது.

1931-ம் ஆண்டில் நவம்பர் 2-ம் தேதி நடந்த முதல்தர கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பிளாக்ஹீத் மற்றும் லித்கோ அணிகள் மோதின. இப்போட்டியில் பிளாக்ஹீத் அணிக்காக பிராட்மேன் களம் இறங்கினார். அப்போது அவருக்கு வயது 23. அன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட்டில் ஒரு ஓவர் என்பது 8 பந்துகளைக் கொண்டதாக இருந்தது.

பிளாக்ஹீத் அணி முதலில் பேட்டிங் செய்ய, பிராட்மேன் களம் இறங்கினார். இப்போட்டியில் அவருக்கு எதிராக பில் பிளாக் என்பவர் முதல் ஓவரை வீசினார். இதற்கு முன்னர் நடந்த போட்டியில்தான் பிராட்மேனை சொற்ப ரன்களில் அவுட் ஆக்கியிருந்தார் பில் பிளாக். அதனால் அவரைப் பழிவாங்க எண்ணிய பிராட்மேன், முதல் பந்தையே சிக்சருக்கு விரட்டினார். அத்துடன் அவரது வேகம் தணியவில்லை அடுத்தடுத்து சிக்சர்களைப் பறக்கவிட்ட பிராட்மேன், முதல் ஓவரில் மொத்தம் 33 ரன்களைச் சேர்த்தார். அடுத்ததாக ஹாரி பேக்கர் என்ற பந்துவீச்சாளர் வர, அவரது ஓவரிலும் 40 ரன்களைக் குவித்த பிராட்மேன், பில் பி்ளாக் வீசிய 3-வது ஓவரில் தனது சதத்தை நிறைவு செய்தார். இந்த சதத்தை அடிக்க அவருக்கு 18 நிமிடங்களே தேவைப்பட்டன.

இப்போட்டியில் அடுத்தடுத்த பந்துகளில் பிராட்மேன் அடித்த ரன்கள் 6, 6, 4, 2, 4, 4, 6, 1, 6, 4, 4, 6, 6, 4, 6, 4, 6, 6, 1, 4, 4, மற்றும் 6.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x