

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங் ஸில் 87 ஓவர்களில் 4 விக்கெட் இழப் புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது.
இவ்விரு அணிகள் இடையி லான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் 2 ரன்களில் வெளியேற, முகமது ஹபீஸுடன் இணைந்தார் ஷோயிப் மாலிக். அற்புதமாக ஆடிய இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 168 ரன்கள் குவித்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ஹபீஸ் 170 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து யூனிஸ் கான் களமிறங்க, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய மாலிக் 182 பந்துகளில் சதம் கண்டார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களம் கண்ட ஷோயிப் மாலிக், இங்கிலாந்துக்கு எதிராக அடித்த முதல் சதம் இது. ஒட்டுமொத்தத்தில் அவர் அடித்த 3-வது சதம் இதுவாகும்.
பாகிஸ்தான் 247 ரன்களை எட்டியபோது யூனிஸ் கான் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த கேப்டன் மிஸ்பா உல் ஹக் 3 ரன்களில் ஆட்டமிழக்க, ஆசாத் ஷபிக் களம்புகுந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 87 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. மாலிக் 230 பந்துகளில் 14 பவுண்டரி களுடன் 124, ஆசாத் ஷபிக் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
யூனிஸ் கான் சாதனை
நேற்றைய ஆட்டத்தில் 15 ரன்களில் இருந்தபோது சிக்ஸர் அடித்த யூனிஸ்கான் டெஸ்ட் போட்டியில் அதிக ரன் (8833) குவித்த பாகிஸ்தானியர் என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக ஜாவித் மியான்தத் 124 போட்டிகளில் 8832 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஆனால் யூனிஸ் கான் அந்த சாதனையை 102 போட்டிகளில் முறியடித்துள்ளார்.