

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஒரு ரன்னில் சதத்தைத் தவறவிட்டார் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில். களத்தில் அவர் பேட்டை வீசி எறிந்த செயலுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் அணியில் 3-வது வீரராகக் களமிறங்கி விளையாடிய கெயில் தனது அதிரடியான ஆட்டத்தில் சதத்தை நெருங்கினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் வீசிய 20-வது ஓவரின் 4-வது பந்தில் கால்காப்பில் பட்டு கெயில் 99 ரன்களில் போல்டாகினார்.
சதத்தை நோக்கி நகர்ந்த கெயிலுக்கு 99 ரன்களில் அவுட் ஆனது பெருத்த ஏமாற்றத்தை அளித்ததால், பேட்டைக் களத்தில் வீசி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் வெளியே செல்லும்போது, ஆர்ச்சருக்குக் கைகுலுக்கி தனது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்த கெயில் தவறவில்லை. கெயில் 63 பந்துகளில் 99 ரன்கள் (8 சிக்ஸர், 6 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.
கெயில் பேட்டை வீசி எறிந்தது குறித்து கள நடுவர்கள், போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர். களத்தில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்ட கிறிஸ் கெயில் அதற்கு வருத்தம் தெரிவித்தார்.
இருப்பினும், ஐபிஎல் ஒழுக்க விதிகளை மீறிக் களத்தில் செயல்பட்ட கெயிலுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. ஐபிஎல் ஒழுக்கவிதிகள் 2.2.ன்படி லெவல் ஒன் குற்றத்தைக் கெயில் செய்துள்ளார். அந்தக் குற்றத்தையும் கெயில் ஒப்புக்கொண்டார் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.