

ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை பாகிஸ்தான் 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
ஒருநாள் அணி கேப்டனாக பாபர் ஆஸம் தன் முதல் போட்டியிலேயே வென்றார்.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான், நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே அணி 49.4 ஓவர்களில் 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரீடி 49 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரெண்டன் டெய்லர் ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக, 117 பந்துகளில் 11 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 112 ரன்கள் எடுத்தார்.
பிரெண்டன் டெய்லரின் அபார 11வது சதத்தின் மூலம் ஜிம்பாப்வே 234/4 என்று இருந்தது. அதாவது வெற்றி பெற 30 பந்துகளில் 48 ரன்கள் மட்டுமே தேவை.
ஆனால் வஹாப் ரியாஸ் (4/41), வெஸ்லி மேதவெரே (55) என்ற வீரரை பவுல்டு செய்ய 5வது விக்கெட் கூட்டணி 119 ரன்கள் சேர்ப்புக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அடுத்த ஓவரில் ஷாஹின் அஃப்ரீடி, பிரெண்டன் டெய்லர் விக்கெட்டை வீழ்த்தினார்.
கடைசி 6 விக்கெட்டுகளை ஜிம்பாப்வே 21 ரன்களில் இழக்க 255 ரன்களுக்கு சுருண்டது. ஷாஹின் அஃப்ரீடி துவக்கத்திலும் சேதம் ஏற்படுத்தினார் தன் முதல் 3 ஒவர்களுக்குள் 2 விக்கெட்டுகளைச் சாய்க்க ஜிம்பாப்வே 28/2 என்று ஆனது.
பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் சோஹைல் 71 ரன்களையும் இமாம் உல் ஹக் 58 ரன்களையும் எடுத்தாலும் 39 ஓவர்களில் பாகிஸ்தான் 175/4 என்று மட்டுப்படுத்தப்பட்டது. பாபர் ஆஸம் 18 பந்துகளில் 19 என்று பிரமாதமாகத் தொடங்கி மிகப்பிரமாதமாக வீசிய வேகப்பந்து வீச்சாளர் முஸராபானியிடம் (2/39) வெளியேறினார். ஆனாலும் பாகிஸ்தான் கடைசி 11 ஒவர்களில் 106 ரன்கள் விளாசினர்.
ஹாரிஸ் சொஹைல் 42வது ஓவரில் விக்கெட் கீப்பர் கேட்சுக்கு வெளியேறினார். பாகிஸ்தான் 205/6 என்று ஆனது. ஆனால் இமாத் வாசிம் வந்தார் 26 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் 291/8 என்ற இலக்கை எட்டியது.
பாஹிம் அஷ்ரப் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுக்க வஹாப், ஷாஹின் அப்ரீடி தலா ஒரு பவுண்டரி அடித்துப் பங்களிப்புச் செய்தனர்.
ஷாஹின் தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அற்புத சதநாயகன் பிரெண்டன் டெய்லர், கிரெய்க் இர்வின் (42) இணைந்து 3வது விக்கெட்டுக்காக 71 ரன்களைச் சேர்த்தனர். அதன் பிறக் விரைவில் 2 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே 115/4 என்று ஆனது.
டெய்லர் வெற்றிக்கு இட்டுச் செல்வார் என்ற போதுதான் வஹாப் ரியாஸ், ஷாஹின் அஃப்ரீடி ஒரு பயங்கரமான ஸ்பெல்லில் ஜிம்பாவேயை சரித்தனர்.
இதே மைதானத்தில் ஞாயிறன்று 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இது இரு அணிகளின் 2023 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுகளின் தொடக்கமும் ஆகும்.