

வருண் சக்ரவர்த்தி அன்று தோனியை பிரமாதமாகக் கட்டிப்போட்டு பிறகு ஸ்டம்பைப் பெயர்த்தார். இது இளம் பவுலர் வருணுக்கு மிகபெரிய கொண்டாட்டத் தருணம்.
ஆனால் இதை விடவும் கொண்டாட்டத்தருணம்தான் தோனி அவருக்கு சிலபல டிப்ஸ்களை வழங்கி ஆட்டோகிராப் போட்ட தருணம்.
சென்னை - கொல்கத்தா போட்டியில் ருதுராஜ் பிரமாதமாக ஆடினாலும் முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழக்க கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா வெளுத்துக் கட்டி சென்னையை வெற்றி பெறச் செய்தார்.
போட்டி முடிந்ததும் கொல்கத்தா அணியைச் சேர்ந்த வீரர்கள் தோனியைச் சந்தித்தனர். அவர்களுக்கு கிரிக்கெட் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார் தோனி.
சென்னை பவுலர்களை கதிகலங்க விட்ட நிதிஷ் ராணா, தன்னை பவுல்டு ஆக்கிய வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு கிரிக்கெட் ஆலோசனைகளை வழங்கியதோடு ஆட்டோகிராஃபும் போட்டுக்கொடுத்தார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வும் தோனி கையெழுத்திட்ட சிஎஸ்கே ஜெர்சியைப் பெற்று மகிழ்ந்தார். ஜடேஜாவும் தோனியின் கையெழுத்திட்ட ஜெர்சியை பெற்று மகிழ்ந்தார், இது சென்னை அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் வீடியோவாக வெளியானது.
ஆனால் தோனியின் இந்தச் செய்கை அவர் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப்போகிறாரோ என்ற ஐயத்தை பலருக்கும் ஏற்படுத்தியது.