Published : 30 Oct 2020 04:24 PM
Last Updated : 30 Oct 2020 04:24 PM

சிஎஸ்கே அணியில் அடுத்த சீசனுக்கு மாற்றம் இருக்காது; இதே அணியோடு வந்து தோனி சாதித்துக் காட்டுவார்: ஆஷிஸ் நெஹ்ரா நம்பிக்கை

2021-ம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. தற்போது இருக்கும் இதே பழைய அணிதான் அடுத்த சீசனிலும் தொடரும் என நான் நம்புகிறேன். இதே அணியோடு வந்து தோனி சாதித்துக் காட்டுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 3 முறை சாம்பியன், 6 முறை 2-வது இடம் என ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் சிஎஸ்கே அணி வெளியேறியதே இல்லை. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 13-வது சீசன் ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் சிஎஸ்கே அணி முதல் முறையாக வெளியேறியது.

அணியில் இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பளிக்காதது, அனுபவம் எனக் கூறி மூத்த வீரர்களைக் களமிறக்குவது எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

தோனியின் கேப்டன்ஷிப்பும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் காட்டமான கருத்துகளால் வசைபாடப்பட்டன. இதனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் வீரர்கள் தேர்வில் மிகப்பெரிய மாற்றத்தை அணி நிர்வாகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிகழ்ச்சியில் கூறியதாவது:

''2021-ம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றுதான் நினைக்கிறேன். கிரிக்கெட்டில் 30 முதல் 35 வயது என்பதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.

தோனி மிகவும் ஸ்மார்ட்டான வீரர். அடுத்த ஆண்டு இன்னும் வலிமையோடு வந்து சாதித்துக் காட்டுவார்.

தோனி என்பவர் மனதளவில் மிகவும் வலிமையான வீரர். அவருக்கு அணியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தெரியும். அவருக்கு அணியை நிர்வகிப்பது பெரிய பணியாக இருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும், நீங்கள் தகுதி பெறாவிட்டால் அது உங்களைப் பாதிக்கும். இது முதல் முறைதானே. ஆனால், அடுத்த முறை இதே அணியோடு தோனி வந்து சாதித்துக் காட்டுவார்.

வயது என்பது பிரச்சினையில்லை. ஐபிஎல் தொடரில் நான் 39 வயது வரை விளையாடினேன். நான் ஒரு வேகப்பந்துவீச்சாளர். நானே 39 வயது வரை விளையாட முடிந்தது. இன்னும் கூட நீண்டகாலம் விளையாடி இருக்க முடியும்.

ஆதலால், சிஎஸ்கே அணியில் அடுத்த ஆண்டு ஷேன் வாட்ஸன் கூட இருப்பார் என நினைக்கிறேன். ஆதலால், பெரிய அளவுக்கு அணியில் மாற்றம் ஏதும் சிஎஸ்கே நிர்வாகம் செய்யாது என்றே நம்புகிறேன்.

நாம் ஐபிஎல் தொடரைப் பார்த்தவரை, சிஎஸ்கே அணியில் வீரர்கள் 30 முதல் 35 வயதுள்ளவர்கள் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், அவர்களால் என்ன செய்ய முடிகிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த ஒரு சீசனை வைத்து எடைபோட முடியாது. அடுத்த சீசனில் இதே பழைய சிஎஸ்கே திரும்ப வருவார்கள்''.

இவ்வாறு நெஹ்ரா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x