Published : 30 Oct 2020 02:36 PM
Last Updated : 30 Oct 2020 02:36 PM

நியூஸிலாந்துக்கு வந்திருங்க: சூர்யகுமார் யாதவுக்கு ஸ்காட் ஸ்டைரிஸ் அழைப்பு

மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் : படம் உதவி | ட்விட்டர்.

துபாய்

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் வெளிநாட்டு அணிக்கு விளையாட விருப்பப்பட்டால் எங்களுக்கு விளையாடலாம் என்று நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது.

இந்த ஆட்டத்தில் மும்பை அணி 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, சூர்யகுமார் தூணாக இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 43 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் யாதவ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒரு சர்வதேச பேட்ஸ்மேனாக உருவாவதற்கான அனைத்துத் தகுதிகளும் சூர்யகுமார் யாதவுக்கு இருந்தபோதிலும் தொடர்ந்து பிசிசிஐ தேர்வுக்குழுவினர் தேர்வு செய்ய மறுத்து வருகின்றனர்.

மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கடந்த 3 ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பாக விளையாடிக் கொடுத்துள்ளார். 2018 ஐபிஎல் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள், 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 480க்கும் மேற்பட்ட ரன்கள், இந்தத் தொடரில் இதுவரை 350க்கும் மேற்பட்ட ரன்களை சூர்யகுமார் யாதவ் சேர்த்துள்ளார்.

நியூஸி. முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ்.

ஆனால், சூர்யகுமார் யாதவை பிசிசிஐ தேர்வுக்குழு ஆஸ்திரேலியத் தொடருக்குத் தேர்வு செய்யவில்லை. சூர்யகுமாரின் ஆட்டத்தைப் பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் வீரர் சச்சின், சேவாக், ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆறுதல் தெரிவித்துப் பாராட்டி இருந்தனர்.

இந்நிலையில் நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், சூர்யகுமார் யாதவ் வெளிநாட்டு அணிக்கு விளையாட விருப்பம் இருந்தால் வரலாம் என்று தங்கள் நாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டைரிஸ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “சூர்யகுமார் யாதவின் திறமையைப் பார்த்து வியக்கிறேன். அவர் வெளிநாட்டு அணிக்கு விளையாட விருப்பமாக இருந்தால் வரலாம். நியூஸிலாந்து அணிக்குக் கூட விளையாடலாம்” என நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x